Sunday, September 24, 2023
No menu items!
Homeதமிழக செய்திகள்தி.மு.க.வின் 2 ஆண்டு ஆட்சி இந்தியாவையே ஈர்த்துள்ளது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தி.மு.க.வின் 2 ஆண்டு ஆட்சி இந்தியாவையே ஈர்த்துள்ளது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சட்டசபையில், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- 2 ஆண்டுகளுக்கு முன்னால் இதே ஏப்ரல் மாதத்தில்தான் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்துவதற்கு முடிவெடுத்தார்கள். இன்னும் இரண்டு வார காலத்தில், இரண்டு ஆண்டு காலம் நிறைவடைந்து, தி.மு.க. ஆட்சி 3-வது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறது. இனி தமிழ்நாட்டை நிரந்தரமாக திராவிட முன்னேற்றக் கழகம்தான் ஆளவேண்டும் என்று மக்கள் மன நிறைவுடன் முடிவெடுக்கும் வகையில் இந்த 2 ஆண்டு காலமாக நாம் ஆட்சியை நடத்தி வருகிறோம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் தமிழ்நாடு அரசு நன்மை செய்து கொண்டிருக்கிறது என்பதை என்னால் தலை நிமிர்ந்து சொல்ல முடியும். * மகளிர்க்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி செய்து தரப்பட்டதன் மூலமாக, இதுவரை 265 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளார்கள். * குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை செப்டம்பர் மாதம் முதல் தர இருக்கிறோம். இதன் மூலம் ஒரு கோடி மகளிர், மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் பெறப் போகிறார்கள். * பல்வேறு மாவட்டங்களில் நான் கலந்துகொண்ட நலத்திட்ட உதவி விழாக்களின் மூலமாக மட்டும் ஒரு கோடிப் பேருக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டுள்ளன. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபோது 62 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறையை, நடப்பு மதிப்பீடுகளில் 30 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைத்துள்ளோம்.

தமிழ்நாட்டை நோக்கி 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளை நாம் ஈர்த்துள்ளோம். * மாநில உள்நாட்டு உற்பத்தி 6.11 சதவீதமாக உயர்ந்துள்ளது. * வேளாண் உற்பத்தி அதிகமாகி இருக்கிறது. பாசனப் பரப்பும் அதிகமாகி இருக்கிறது. இப்படித் துறைவாரியாக நான் சொல்லத் தேவையில்லை. அனைத்து அமைச்சர்களும் அவற்றை இதே அவையில், விரிவாக ஆதாரங்களோடு சொல்லி இருக்கிறார்கள். இப்படி துறைரீதியாகச் சாதனைகளை நெஞ்சை நிமிர்த்திச் சொல்லும் திராவிட மாடல் அரசாக நமது அரசு அமைந்துள்ளது. * உதயசூரியன் உதிப்பதற்கு முன்னால் எழுந்து உழவுக்குச் செல்லும் உழவர்களின் முகத்தில் மலர்ச்சி இருக்கிறது. காரணம், இலவச மின்சாரம் கிடைக்கிறது.

காலை நேரத்தில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முகத்தில் மலர்ச்சி காணப்படுகிறது, காரணம், பள்ளியிலேயே காலை உணவு கிடைக்கிறது. * பல்வேறு பணிகளுக்காக புறப்படும் மகளிர் முகத்தில் மலர்ச்சி காணப்படுகிறது காரணம்-பேருந்துகளில் கட்டணமில்லை. இப்படி மக்களுக்கு நேரடியாக தினமும் பலன் தரும் அரசாக தமிழ்நாடு அரசு இருக்கிறது. அதனால் தான் அவதூறுகளை யார் அள்ளி வீசினாலும், திசை திருப்பும் திருகுவேலைகளை யார் செய்தாலும், மக்கள் மனங்களை யாராலும் மாற்ற முடியவில்லை. ஏமாற்றவும் முடியவில்லை. நாங்கள் தேர்தலில் மட்டும் வெல்லவில்லை. மக்களின் மனங்களையும் வென்று, அவர்கள் நெஞ்சங்களில் நிரந்தரமாகக் குடியேறி இருக்கிறோம். இது தனிப்பட்ட ஸ்டாலினின் அரசு அல்ல. இது தி.மு.க. என்ற தனிப்பட்ட கட்சியின் அரசு அல்ல. ஒரு இனத்தின் அரசாக, எட்டுக்கோடி மக்களின் அரசாக, ஒரு கொள்கையின் அரசாக இருக்கிறது. திராவிட மாடல் என்ற கோட்பாட்டின் அரசாக இருக்கிறது. சமூகநீதி, சமத்துவம், சமதர்மம், சகோதரத்துவம், மொழி உரிமை, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய ‘திராவிடவியல் கோட்பாடு’ என்பதே திராவிட மாடல் சாசனம்.

ஓர் அரசு மக்கள் நல அரசாகவும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் கொள்கை அரசாகவும் இருக்க வேண்டும். மக்களுக்கான உதவிகளை மட்டும் செய்துவிட்டு, கோட்பாடுகளில் இருந்து விலகிச் சென்று விடக் கூடாது. ஒரு பக்கம் மக்கள் நலன், இன்னொரு பக்கம் கொள்கை உரம். இவை இரண்டையும் முன்னெடுக்கும் ஆட்சியாக 2 ஆண்டுகளை நாம் நிறைவு செய்யப்போகிறோம். இது இந்தியாவையே ஈர்க்கும் ஆட்சியாக அமைந்துள்ளது என்பது, என்னுடைய பெருமை மட்டுமல்ல. இந்த அமைச்சரவையின் பெருமை. ஏன், எங்களோடு தோளோடு தோள் சேர்த்து நிற்கும் கூட்டணிக் கட்சிகளுடைய பெருமை. காவலர்களின் செயல்பாட்டில் குற்றங்குறைகள் இருக்கலாம். குறையே இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். குறை கண்டுபிடிக்கப்பட்டதும், அவை திருத்தப்பட்டனவே தவிர, கண்டும் காணாமல் விடப்படவில்லை. எந்த குற்றவாளியையும், அது யாராக இருந்தாலும், எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும், அவர்களை நாங்கள் நிச்சயமாக காப்பாற்ற மாட்டோம் என்று இந்த மாமன்றத்தில் உறுதியாக கூறுகிறேன். சிறுசிறு தவறுகள் நடந்திருந்தாலும், அதனை திருத்திக் கொள்ளும் பண்பை காவல்துறையினர் பெற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் சாதிச் சண்டைகள் இல்லை, மதச் சண்டைகள் இல்லை, கூட்டு வன்முறைகள் இல்லை, கலவரங்கள் இல்லை, துப்பாக்கிச் சூடு இல்லை, காவல் நிலைய மரணங்கள் இல்லை. இப்படி இல்லை… இல்லை… இல்லை… என்றுதான் என்னால் சொல்ல முடியும். இதெல்லாம் இல்லை என்பதற்கு அடையாளமாகத்தான் புதிய தொழிற் சாலைகள் வருகின்றன, புதிய முதலீடுகள் வருகின்றன, புதிய நிறுவனங்கள் வருகின்றன, அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி வருகிறது, ஆட்சிக்கு நல்ல பெயர் வருகிறது. “அமைதியான மாநிலம் தமிழ்நாடு” என்ற நற்பெயர் வருகிறது. ஒரு மாநிலம் வளருகிறது என்றால், அது அமைதியான மாநிலமாக இருக்கிறது என்று பொருள். சட்டம்-ஒழுங்கைப் பேணி, பொதுமக்களிடம் அச்ச உணர்வைப் போக்கி இருக்கிறது நமது அரசு. எந்தவிதக் குறுக்கீடும் இன்றி காவல் துறையை செயல்பட அனுமதித்துள்ளோம். இதனால்தான் சமூக விரோதிகள், கொள்ளையர்கள், வன்முறையாளர்கள் உடனுக்குடன் கைது செய்யப்படுகிறார்கள். குற்றம் நடந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதால் குற்றங்கள் குறைந்துள்ளன.

மிகப்பெரிய மோதல் ஒன்று அரசின் வேகமான நடவடிக்கைகளால் எப்படி தவிர்க்கப்பட்டது என்பதற்கு எடுத்துக்காட்டுதான், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று பரப்பப்பட்ட வதந்திகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள். வடமாநிலங்களில் இரு பிரிவினரிடையே நடைபெற்ற மோதல் சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்தது போன்று சித்தரித்துக் காட்டியுள்ளதாகக் காவல்துறை இயக்குநர் அவர்கள் உடனடியாக விளக்கம் தந்தார். அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினரும், காவல் துறையினரும், வடமாநிலத்தவர்கள் அதிகம் பணிபுரியும் இடங்களில் குறிப்பாக உணவு விடுதிகள், கட்டுமான நிறுவனங்கள், பல்வேறு தொழிற்சாலைகள் போன்றவற்றுக்குச் சென்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்தி, அவர்களது அச்சத்தைப் போக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மொத்தம் 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 178 பேர் கைது செய்யப்பட்டார்கள். தமிழ்நாடு அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்ததால்தான் தமிழ்நாட்டிலும், சில வடமாநிலங்களிலும் கொந்தளிப்பு எழாமல், அது தவிர்க்கப்பட்டது. தமிழ்நாடு காவல்துறை நுண்ணறிவுப் பிரிவின் ஒரு அங்கமாக விளங்கும் சிறப்பு பிரிவின் நுண்ணறிவுத் தகவல்களின்படி விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் மூலம் மதரீதியான மோதல்கள் எதுவுமின்றி தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்பட்டுவருவது குறித்து, புள்ளிவிவரத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் தாக்கலான 182 ஆதாயக்கொலை வழக்குகளில் 171 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 3 ஆயிரத்து 194 கொலை வழக்குகளில் 3 ஆயிரத்து 144 வழக்குகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 252 கூட்டுக்கொள்ளை வழக்குகளில் 242 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 5 ஆயிரத்து 281 கொள்ளை வழக்குகளில் 4 ஆயிரத்து 240 வழக்குகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 874 வன்புணர்வு வழக்குகளில் 849 வழக்குகளில் எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

90 பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில், 75 வழக்குகளில் எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 9 ஆயிரத்து 440 போக்சோ வழக்குகளில் 9 ஆயிரத்து 340 வழக்குகளில் எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நேற்று உறுப்பினர்கள் பேசும்போது, ‘ஆருத்ரா போன்ற நிதிநிறுவனங்களின் மோசடிகள் பற்றிக் குறிப்பிட்டு பேசினார்கள். நான் நேற்றே இதுகுறித்து விளக்கமாக பதிலளித்து இருக்கிறேன். இருந்தாலும் ஒன்றை மட்டும் அழுத்தம் திருத்தமாக இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன். மக்களிடம் ஆசையைத் தூண்டி இதுபோன்ற நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன. இத்தகைய நிதி நிறுவனங்கள் அனைத்தையும் கண்காணிக்குமாறு காவல்துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இத்தகைய நிதி நிறுவனங்களின் மோசடிகளைத் தடுக்க முதன்முதலில் சட்டம் கொண்டு வந்ததும், முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசுதான் என்பதைக் குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன். மேலும், இதுபோன்ற நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது பொதுமக்கள் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும்’ என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments