Thursday, September 28, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்எல்லை மீறி பேசும் கவர்னர் ரவி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்- மார்க்சிஸ்ட் மாநில...

எல்லை மீறி பேசும் கவர்னர் ரவி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தக்கலையில் பெண்ணுரிமை பாதுகாப்பு மாநாடு இன்று மாலை நடக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தைகள் திருமணம் அதிகரித்து வருகிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே நீதி கிடைக்க வேண்டும். இருவரும் சமமாக இருக்க வேண்டும். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலமாக ஏராளமான பெண்கள் பயனடைந்து வந்தனர். தற்போது பா.ஜனதா அரசு அதற்கான நிதியை குறைத்துள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் 30 நாட்கள் மட்டுமே வேலை நடந்து வருகிறது. 4000 கோடி ரூபாய் சம்பள பாக்கி உள்ளது. ஆண்கள் சேமிக்கும் சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது.

புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சுந்தரகாண்டம், ராமாயணம், மகாபாரத்தை படித்தால் சுகப்பிரசவம் நடக்கும் என்று கூறியுள்ளார். இது வேடிக்கையாக உள்ளது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசன சட்டத்தை மாற்றி வருகிறார்கள். சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை 15 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ளாட்சிகளில் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்க ஒன்று தான். ஆனால் மேயர் மற்றும் பேரூராட்சி தலைவர்களாக பெண்கள் இருந்தாலும் அவர்களை முன்னிலையில் வைத்து விட்டு ஆண்கள் தான் அதை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை அதிகரித்து உள்ளது. 2020-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மாநில அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். குழந்தைகள் திருமணத்தை தடுக்க 1986-ல் சட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது சிதம்பரத்தில் தீட்சிகர் ஒருவர் குழந்தை திருமணம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக ஆளுநர் ரவி பேசியுள்ளது வேடிக்கையாக உள்ளது. தானும் குழந்தை திருமணம் செய்து கொண்டதாக பகிரங்கமாக பேசியுள்ளார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநர் ரவி எல்லை தாண்டி பேசி வருகிறார். தமிழகத்தில் பா.ஜனதாவின் அஜெண்டாவை உருவாக்குபவராக கவர்னர் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் ஆளுநர் ரவி ஆர்.எஸ். எஸ்.அமைப்பின் பிரகடனமாக செயல்படுகிறார்.

பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பா.ஜனதா விமர்சித்து வருகிறது. இதன் மூலமாக அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள நடுக்கம் வெளியே தெரிய தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும்போது மாறுபட்ட கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். தமிழகத்தில் கூட அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா உள்ளது. ஆனால் அண்ணாமலையை தலைவராக்கினால் கூட்டணி சேரமாட்டோம் என்று கூறியுள்ளார்கள். விலைவாசி உயர்ந்துள்ளது. அதற்கு அடிப்படை காரணம் பா.ஜனதா அரசின் பொருளாதார கொள்கை தான். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் வரி உயர்வு காரணமாகும். மின் கட்டணத்தை தற்போது 25 சதவீதம் உயர்த்துவதாக கூறியுள்ளார்கள். மனிதர்களை இரவு நிம்மதியாக தூங்கவிடாமல் ஆப்பு வைக்கும் செயலில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது. தொழிலாளர் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு சட்ட திருத்தம் கொண்டு வந்ததும் பா.ஜனதா அரசு தான். தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான புகாரை விசாரிக்க வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூறவில்லை. செந்தில் பாலாஜி அமைச்சராக உள்ளார். அவரை விசாரிக்க சில விதிமுறைகள் உள்ளது. அதை மீறி அமலாக்கத்துறை செயல்பட்டுள்ளது. சம்மன் அனுப்பி அவரை விசாரித்து இருக்கலாம். அமலாக்கத் துறை மூலமாக எதிர்க்கட்சியினரை பா.ஜனதா மிரட்டி வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது வாசுகி, மாவட்ட செயலாளர் செல்லசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments