சென்னை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண் குராலா கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் 2019-2020-ம் ஆண்டின் கீழ் நடைபெற்ற தி உயிரி அகழ்வு முறையில் (பயோமைனிங்) மரபு கழிவுகளை அகற்றும் பணி முடிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து திருவட்டார் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 55 லட்சத்தில் பஸ் நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்லும் வழிகள், கடைகள் அமைக்கப்படும் விதம் ஆகியவற்றை கேட்டறிந்து பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் பஸ் நிலையத்தை வடிவமைத்து கட்டுவதற்கு அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து திருவட்டார் பேரூராட்சி நபார்டு நிதி உதவி திட்டம் 2021-2022-ம் ஆண்டு திட்டத்தில் ரூ.54 லட்சத்தில் பாலன்கோணம்-திருவரம்பு பூங்கா சாலை மேம்பாடு பணியை ஆய்வு செய்தார். மேலும் திற்பரப்பு பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022-2023-ம் ஆண்டு ரூ.1 கோடியே 46 லட்சத்தில அமைக்கப்படும் எரிவாயு தகன மேடை பணியையும் அவர் ஆய்வு செய்து ஒப்பந்த காலத்திற்குள் பணியை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வின் போது திருநெல்வேலி சரக பேரூராட்சிகளின் செயற்பொறியாளர் தர்மராஜ், நாகர்கோவில் மண்டலம் பேரூ ராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலெட்சுமி, நாகர்கோவில் மண்டல உதவி செயற்பொறியாளர்கள் புஷ்பலதா, மாரியப்பன், திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலா ரமேஷ், செயல் அலுவலர் மகாராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.