மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் தொடர் புடைய பாஜக வேட்பாளரை கைது செய்ய வலியுறுத்தி 2 நாட்களாக மேற்கொண்ட தர்ணா போராட்டத்தை திக்விஜய் சிங் முடித்துக் கொண்டார்.
மத்திய பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த 17-ம் தேதி தேர்தல்நடைபெற்றது. அன்றைய தினம்சதார்பூர் மாவட்டம் ராஜ்நகர் தொகுதியில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடேயே மோதல் ஏற்பட்டது. அதன் பிறகு கார் மோதியதில் காங்கிரஸ் நிர்வாகி சல்மான் கான் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கஜுராஹோ காவல் நிலைய போலீஸார், ராஜ்நகர் தொகுதி பாஜக வேட்பாளர் அர்விந்த் பதேரியா உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் மூத்ததலைவர் திக்விஜய் சிங் தனதுகட்சிப் பிரமுகர்களுடன் கஜுராஹோ காவல் நிலையம் முன்பு கடந்த 18-ம் தேதி தர்ணா போராட்டத்தை தொடங்கினார். கொலை வழக்கில் தொடர்புடைய அர்விந்த் பதேரியாவை கைது செய்ய வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டம் இரவிலும் நீடித்தது. 2-வது நாளாக 19-ம் தேதியும் தொடர்ந்தது. இந்நிலையில், திக்விஜய் சிங் 19-ம் தேதி மாலை தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார். அதேநேரம், கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கா விட்டால் மீண்டும் போராட்டம் தொடங்கப்படும் என திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.