திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ள மலைப்பகுதி மிகவும் புனிதமான தலமாக கருதப்படுகிறது. இதனால் மலை மீது பீடி, சிகரெட், மது, மாமிசம் மற்றும் வாகனங்களில் வேற்று மதம் சார்ந்த ஸ்டிக்கர்கள், சாமி படங்கள், கட்சி கொடி, பேனர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் உடைமைகள் மலை அடிவாரத்தில் சோதனை செய்யப்படுகிறது. தீவிர சோதனைக்கு பின்னரே வாகனங்களை அனுமதிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று காலை ஏழுமலையான் கோவில் அருகே உள்ள ஒரு கடையில் இருந்து மதுபாட்டில்களை விஜிலென்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ராஜசேகர் என்பவரை கைது செய்தனர்.
தேவஸ்தான வருவாய்த்துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர். கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்த ஒருவர் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று 5 வாலிபர்கள் ஒரு காரில் திருமலைக்கு வந்தனர். அவர்களது காரில் முன் பகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் கொடி கட்டப்பட்டு இருந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் கொடியை அகற்றாமல் திருமலைக்கு காரை அனுமதித்தனர். திருப்பதியில் கடந்த மாதம் பயங்கரவாதி புகுந்ததாக மிரட்டல் விடுத்தனர். பாதுகாப்பை மீறி கோவிலில் செல்போனை கொண்டு சென்று வீடியோ எடுத்து வெளியிட்டனர்.
தற்போது மது சிக்கியதன் மூலம் திருப்பதி மலையில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். புனித தன்மை கொண்ட திருமலையில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று 84,539 பேர் சாமி தரிசனம் செய்தனர். 39,812 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.72 கோடி உண்டியல் வசூலானது. ரூ.300 டிக்கெட் தரிசனத்தில் 4 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டோக்கன் பெற்றவர்கள் 6 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர். நேரடியாக இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.