கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்து, மாவட்ட மக்களின் சார்பாக கீழ்க்கண்ட முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்தார். தேங்காய்பட்டணம் துறைமுக விரிவாக்க பணிகள் நடந்து வருவதற்கு முதலமைச்சருக்கு நன்றி கூறி அந்தப் பணிகளை விரைவுபடுத்த கேட்டுக் கொண்டார். வருகின்ற பருவ மழை காலத்திற்கு முன்பாக அந்த பணிகளை முடித்தால் மீனவ மக்களுக்கு மிகப் பாதுகாப்பாக அது அமையும் என குறிப்பிட்டார். அதுபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் கடல் நீர் புகுவதை தடுப்பதற்கு தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
கன்னியாகுமரி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நெய்யார் இடது கரை கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதற்கு கேரள அரசுடன் சுமுகமாக பேசி தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதுபோன்று வனத்துறை சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்து ரப்பர் விவசாயிகளை நலனை காக்க கேட்டுக்கொண்டார். 25 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ரப்பர் மரங்களை வெட்டி மாற்றுவதற்கு கேரள அரசு கொண்டு வந்தது போல் சட்ட திருத்தம் வேண்டும் என கேட்டுக் கொண்டார். குமரி மாவட்டத்தில் உள்ள சிறார்களும் இளைஞர்களும் விளையாட்டுப் போட்டிகளில் தங்கள் திறமையை மேம்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த ஒரு விளையாட்டு அரங்கம் தேவை என கேட்டுக்கொண்டார். மேலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் குமரி மாவட்டத்தில் ஒரு தொழில்நுட்பவியல் பூங்கா அமைத்து தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.