ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்புக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்திலும் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டம், தீ பந்தம் ஏந்தி போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று ஒழுகினசேரியில் உள்ள சுடுகாட்டில், காங்கிரஸ் நிர்வாகிகள் மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தியாகி தவசிமுத்து, குமரன், ஆறுமுகம் ஆகியோர் சுடுகாட்டில் மொட்டை அடித்துக் கொண்டனர். நரேந்திரமோடி படத்துடன் நிர்வாகிகள் மொட்டை அடித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சியில் போலிங் பூத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர் செல்வ குமார், மகளிர் அணி நிர்வாகி சோனி விதுலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.