கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முன்னாள் பிரதமரும், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) வெற்றி பெறும். நாங்கள் பிரித்தாளும் கொள்கை அடிப்படையில் ஓட்டு கேட்கவில்லை. அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி அடிப்படையில் ஆதரவு கேட்கிறோம். பஞ்சசூத்ரா திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம். அதை முன்வைத்து ஓட்டு கேட்கிறோம். ஜனதா தளம் (எஸ்) கட்சி மைசூரு மண்டலத்தில் மட்டுமே உள்ளதாக தேசிய கட்சிகள் தவறான பிரசாரம் செய்கின்றன. எங்கள் கட்சிக்கு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.
மைசூரு மண்டலம் எங்களுக்கு அதிகளவில் ஆதரவு வழங்கியுள்ளது. அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இந்த முறை மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் எங்கள் கட்சி வெற்றி பெறும். சுயநல நோக்கம் கொண்டவர்கள் பொய்களை பரப்புகிறார்கள். எனது அரசியல் வாழ்க்கையில் பிற கட்சிகளின் பொய்களுக்கு பதில் சொல்ல நான் நிறுவனங்களை வாடகைக்கு அமர்த்தியது இல்லை. கடவுளும், மக்களும் தான் என்னை அரசியலில் கடந்த 60 ஆண்டு காலமாக வளர்த்துள்ளனர். எங்கள் கட்சி 123 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களின் கடின உழைப்பு, தொலைநோக்கு திட்டங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
தேசிய கட்சிகள் பெரிய திட்டங்களை அமல்படுத்துவதாக பொய் சொல்கிறார்கள். அவர்களின் நாடகம் மற்றும் பொய்களை மக்கள் பார்த்துள்ளனர். பிற மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கர்நாடக சட்டசபை தேர்தல் ஒரு முன்னோட்டமாக அமையும். நாட்டில் காங்கிரஸ் மட்டுமே எதிர்க்கட்சி அல்ல. அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் விஷயத்தில் முதலில் காங்கிரஸ் தன்னை சரிசெய்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. நாட்டுக்கு தலைமை தாங்கும் திறன் கொண்ட தலைவர்கள் அதிகமாக உள்ளனர். ராகுல் காந்தி எம்.பி. தகுதி நீக்கம் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. எங்கள் கட்சி தலைவர்கள் இதுகுறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அவரது எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்தது துரதிர்ஷ்டம் என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். இவ்வாறு தேவேகவுடா கூறினார்.