தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய மத்திய அரசை கண்டித்து நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர் பிரசாரம் இன்று நாகர்கோவில் பெருவிளையில் தொடங்கியது. நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமை தாங்கினார்.விஜய் வசந்த் எம்.பி. தொடர் பிரச்சார பயணத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக பேசிய ராகுல்காந்தி மீது பழிவாங்கும் நட வடிக்கைகளை மேற் கொண்டு உள்ளனர். ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது ஜனநாயக படுகொலைக்கு சமமானதாகும். ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
பாரதிய ஜனதா அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 2024-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் மாபெரும் மாற்றம் ஏற்படும். கன்னியாகுமரியில் நான்கு வழி சாலை திட்டம் முடக்கி வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக மத்திய மந்திரியை நான் நேரில் சந்தித்து மனு அளித்தன் அடிப்படையில் தற்போது அந்த பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசை கண்டித்து நாகர்கோவில் மாநகரம் சார்பில் மக்களிடம் விளக்கி சொல்லும் வகையில் தொடர் பிரசார பயணம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு மாவட்ட பகுதிகளிலும் இந்த பிரசாரப் பயணம் மேற் கொள்ளப்படும்.
நிகழ்ச்சியில் போலிங் பூத் காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் ஓ. பி.சி. பிரிவு தென்மண்டல தலைவர் ஜெயச்சந்திரன், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் செல்வக் குமார், காங்கிரஸ் மண்டல தலைவர் சிவபிரபு, மாநக ராட்சி கவுன்சிலர் பால் அகியா மற்றும் நிர்வாகிகள் அலெக்ஸ், சாந்தி ரோஸ்லின், ஐரின் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பெருவிளையில் தெருத் தெருவாக சென்று பாரதிய ஜனதா அரசு நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதி அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். முன்னதாக முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெயபாலின் உருவப்படத்திற்கு விஜய் வசந்த் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இன்று தொடங்கிய தொடர் பிரசார பயணமானது அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது.