குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கே.டி.உதயம் (கிழக்கு), பினுலால் சிங் (மேற்கு), நவீன்குமார் (மாநகர்) ஆகியோர் கூட்டாகவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- நாகர்கோவில் மாநகரில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியின்போது பா.ஜனதா கட்சியினர் காங்கிரஸ் கட்சியினரை தாக்கி கட்சியின் கொடியை எரித்தது தொடர்பாக குமரி மாவட்டத்தில் 3 மாவட்ட தலைவர்களும் கூடி ஆலோசனை மேற்கொண்டோம். காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொருவரும் புனிதமாக கருதும் எங்களது கட்சி கொடியை ரோட்டில் போட்டு எரித்த பா.ஜனதா கட்சியினரை வன்மை யாக கண்டிக்கிறோம். எனவே, இந்த செயலை செய்து எங்கள் கட்சி கொடியை அவமானப்படுத்தியவர்கள் மீது போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜனதாவினரின் இச் செயலை கண்டித்து வருகிற 10-ந்தேதி காலை 10 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.