திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு பகுதியில் 1,200 சதுர அடி பரப்பளவுள்ள இரண்டு படுக்கை அறை வசதி கொண்ட கான்கிரீட் வீட்டை இடிக்காமல் ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நகர்த்தும் பணி தொடங்கியுள்ளது. ஹைட்ராலிக் சிப்டிங் தொழில்நுட்பத்தில் ஸ்க்ரூ ஜாக்கி மூலமாக மெல்ல மெல்ல கட்டிடத்தை நகர்த்தி வருகின்றனர். இதுகுறித்து நவீன தொழில்நுட்பத்தை கையாளும் திருப்பூரை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் பொன்லிங்கம் கூறும்போது, 180 ஜாக்கிகள் மூலமாக 3 அடி உயரத்துக்கு கட்டிடம் உயர்த்தப்பட்டது. பின்னர் 60 ரோலர்கள் உதவியோடு கட்டிடம் நகர்த்தப்பட்டது. ஒரு நாளுக்கு 8 அடி தூரம் என 3 நாட்களில் 24 அடி தூரம் நகர்த்தப்படும். இதுவரை 8 அடி தூரம் நகர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மொத்தம் ரூ.5 லட்சம் வரை செலவாகும். கட்டிடத்துக்கு எந்தவித சேதரமும் ஏற்படாது. இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக 5 மாடி உயர கட்டிடம் வரை நகர்த்தவும், உயர்த்தவும் முடியும் என்றார்.