புதுக்கடை அருகே பார்த்திபபுரம் பகுதி சடச்சிவிளையை சேர்ந்தவர் ஸ்ரீகுமார். இவரது மகள் ஜெயஸ்ரீ (வயது 25). இவர் தொலையாவட்டம் பகுதியில் உள்ள கல்லூரியில் முதுகலை 2-ம் ஆண்டு படித்து வந்தார். ஜெயஸ்ரீ கடந்த சில நாட்களாக நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஜெயஸ்ரீயின் தாயார் கடைக்கு சென்றார். ஜெயஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். கடைக்கு சென்ற அவரது தாயார் வீடு திரும்பியபோது வீட்டின் ஹாலில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவில் தூக்கு போட்டு ஜெயஸ்ரீ தொங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரது தயார் கூச்சலிட்டார்.
இதையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். தூக்கில் தொங்கிய ஜெயஸ்ரீயை மீட்டு வெள்ளையம்பலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ஜெயஸ்ரீயை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஜெயஸ்ரீ உடல் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஜெயஸ்ரீயின் தம்பி ஶ்ரீநாத், புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான ஜெயஸ்ரீயின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.