Tuesday, September 26, 2023
No menu items!
Homeதமிழக செய்திகள்மும்மத குருமார்கள் முன்னிலையில் மகளின் திருமணத்தை நடத்தும் கோவை போலீஸ் அதிகாரி- வைரலாகும் திருமண அழைப்பிதழ்

மும்மத குருமார்கள் முன்னிலையில் மகளின் திருமணத்தை நடத்தும் கோவை போலீஸ் அதிகாரி- வைரலாகும் திருமண அழைப்பிதழ்

கோவையில் மும்மதங்களைச் சேர்ந்த குருமார்கள் முன்னிலையில் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் போலீஸ் டி.எஸ்.பி. வீட்டு திருமண அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. கோவை மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருபவர் வெற்றிச்செல்வன். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.ஐ.சி எனப்படும் மதம் சார்ந்த பிரச்சனைகளை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றி வந்தார். அப்போது அவர் மதம் சார்ந்த பிரச்சினைகளை சிறப்பாக கையாண்டு சுமூகமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். பல பிரச்சினைகளின் போது துரிதமாக செயல்பட்டு கலவரங்களை தடுத்தும், கட்டுப்படுத்தியும் உள்ளார். இதற்காக அவர் ஜனாதிபதி விருது மற்றும் அண்ணா விருதையும் பெற்றுள்ளார்.

இவருக்கு நிஷாந்தினி என்ற மகள் உள்ளார். இவர் பி.எச்.டி படித்து வருகிறார். இந்நிலையில் வெற்றி செல்வன், தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க அவர் முடிவு செய்தார். அதன்படி நெல்லையை சேர்ந்த சுதர்சன் என்பவரை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க பேசி முடித்தார். எம்மதமும் சம்மதம் என்ற எண்ணத்தில் இருக்கும் வெற்றி செல்வன் தனது மகளின் திருமணத்தையும் மதத்தை கடந்து இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மத குருமார்கள் முன்னிலையில் நடத்த முடிவெடுத்தார். அதன்படி பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார், கவுமார மடாலயம் குருமகா சந்நிதானம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், காமாட்சி புரி ஆதீனம் ஞானகசாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள், கோவை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் மற்றும் போத்தனூர் இமாம் மஸ்ஜிதே இப்ராஹிம் சுன்னத் ஜமாஅத் தலைவர் மவுளவி அல்லாஜ் அப்துல் ரஹீம் இம்தாதி பாகவி ஆகியோருக்கு தனது மகள் திருமணத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.

இது தொடர்பாக அடிக்கப்பட்ட திருமண பத்திரிகையிலும் மும்மதங்களை சேர்ந்த குருமார்களின் பெயர்களும் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் திருமண பத்திரிக்கையில், “உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு.” என்ற திருக்குறளும் அச்சிடப்பட்டுள்ளது. தற்போது இந்த திருமண பத்திரிக்கை சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. போலீஸ் அதிகாரி ஒருவர் மதங்களைக் கடந்து மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என்று முனைப்பு காட்டியிருப்பது, போலீஸ்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக உள்ளது. இந்நிலையில் இவரின் மத நல்லினக்கத்திற்கு பொதுமக்கள் மற்றும் சக போலீசார் வரவேற்பையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். இந்த திருமண நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்களில் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கள் ஏ.கே.விஸ்வநாதன், சீமா அகர்வால், கூடுதல் டி.ஜி.பி அமல்ராஜ் மற்றும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments