குமரியில் இலவங்காய் சீசன் தொடங்கியது. போதிய விலை கிடைக்காததால் பழங்குடியின மக்கள் கவலையில் உள்ளனர்.தேனி மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் அதிக அளவில் இலவு மரங்கள் உள்ளன. குறிப்பாக பேச்சிப்பாறையை மையமாகக் கொண்ட பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளான மோதிரமலை, மூக்கறைக்கல், கோலிஞ்சிமடம், மணலோடை, புறாவிளை, வலியமலை, வில்லுசாரிமலை, ஒருநூறாம் வயல், ஆறுகாணி, பத்துகாணி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான இலவு மரங்கள் காணப்படுகின்றன. இலவு மரங்களில் டிசம்பர் மாத இறுதியில் காய் பிடிக்கத் தொடங்கும். பின்னர் பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலங்கள் காய் சீசன் காலங்களாகும். மரங்களில் காய்கள் உலர்ந்து வெடிக்கும் தருவாயில் அவை அறுவடை செய்யப்படுகின்றன. பொதுவாக குமரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் இலவம் காய்களை தேனி மாவட்டத்தில் வரும் வியாபாரிகள் உள்ளூர் வியாபாரிகளிடமிருந்தும், பழங்குடி மக்களிடமிருந்தும் கொள்முதல் செய்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலவங்காய்கள் சராசரியாக காய் ஒன்றுக்கு ரூ.1-க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் நடப்பாண்டில் ஒரு காய் 70 காசுகளுக்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இலவங்காய்களின் விலை சரிவு காரணமாக சுயமாக மரங்களில் ஏறி காய் பறிக்கும் பழங்குடி மக்கள் மட்டும் காய்களை பறிக்கின்றனர். கூலிக்கு ஆள்வைத்து காய் பறிக்கும் நிலையில் உள்ளவர்கள் காய்களை பறிக்காமல் விட்டுள்ளனர். போதிய விலை கிடைக்காததால் பழங்குடியின மக்கள் கவலையில் உள்ளனர். எனவே இலவங்காய்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளி கருத்து இதுகுறித்து பேச்சிப்பாறை அருகே ஆண்டிபொற்றை பகுதியைச் சேர்ந்த பழங்குடி தொழிலாளி சரவணன் கூறியதாவது:- கடந்த சில ஆண்டுகளாக இலவங்காய்களின் விலை சரிந்து வருகிறது. தற்போது ஒரு காய்க்கு 70 காசு என்ற அளவிலேயே கிடைக்கிறது. பொதுவாக இலவு மரங்களில் ஏறி காய் பறிப்பதற்கு நாளொன்றிற்கு ரூ.1,500 வரை கூலி கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் சொந்தமாக காய் பறிப்பவர்கள் மட்டுமே மரங்களில் ஏறி காய் பறிக்கிறார்கள். மற்றவர்கள் கீழே உதிர்ந்து விழும் குறைந்த எண்ணிக்கையிலான காய்களை சேகரித்து விற்பனை செய்கிறார்கள். எனவே இலவங்காய்களுக்கு நியாயமான விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த இலவங்காய் வணிகர் சிவராஜ் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் இலவங்காய்களில் 75 சதவீதத்திற்கு மேல் தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதர காய்கள் குமரி மாவட்டத்திலும் கேரளாவிலும் உள்ள மெத்தை, தலையணை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 1 கோடி இலவங்காய்கள் சேகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதன் மூலம் ரூ.1 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று வந்தது. இதனால் பழங்குடியின மக்கள், வாகன ஓட்டுனர்கள் உள்பட பலருக்கு வருவாய் கிடைத்து வந்தது. தற்போது இலவங்காய்களின் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. தேனி மாவட்டத்திற்குள்ளேயே கொட்டைப் பஞ்சு எனப்படும் மேல் தோடு எடுக்கப்பட்டு பஞ்சின் விலை கிலோ ரூ.60-ல் இருந்து ரூ.55 ஆக குறைந்துள்ளது. மேலும் இந்திய அளவில் இந்தோனேஷியா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து குறைந்த விலையில் பஞ்சுகள் மற்றும் பஞ்சு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. தேங்காய் நார் மெத்தைகள், ரப்பர் பஞ்சு மெத்தைகள் போன்றவற்றின் வருகை அதிகரிப்பின் காரணமாக இலவம் பஞ்சின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் இலவங்காய்களின் விலையை குறைத்து கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.