திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஸ்ரீ வாரி சேவை செய்ய தினமும் ஆயிரக்கணக்கான ஆண், பெண், பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகின்றனர். ஏழுமலையானுக்கு சேவை செய்ய விருப்பம் உள்ள ஆண் பெண் பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்படும் ஆன்லைனில் தங்களது ஆதார் அட்டையை பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அவர்களுக்கான தேதியை சேவை செய்ய விரும்பும் பக்தர்களுக்கு தெரிவிக்கின்றனர். ஸ்ரீவாரி சேவை செய்ய தேவஸ்தானம் அனுமதிக்கும் பக்தர்கள் தொடர்ந்து 7 நாட்கள் திருமலையில் தங்கி இருக்க வேண்டும். அவர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தங்குவதற்கு இடம் உணவு வழங்கப்படும். சேவை செய்ய வரும் பக்தர்கள் வெள்ளை நிற வேட்டி, சட்டை அல்லது வெள்ளை நிற பேண்ட் எடுத்து வர வேண்டும்.
ஸ்ரீ வாரி சேவகர்கள் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல், லட்டு பிரசாதம் பிடித்தல், டைரி காலண்டர் விற்பனை செய்தல், பக்தர்கள் தரிசன வரிசையை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் எந்த நேரம் ஒதுக்கினாலும் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும். கட்டாயம் ஒரு வாரம் தங்கி இருக்க வேண்டும். இந்த நிலையில் அடுத்த மாதம் 9-ம் தேதி முதல் 16-ந் தேதி வரை சென்னையை சேர்ந்த ஆண் சேவகர்கள் மட்டும் ஒரு வாரம் தங்கி ஏழுமலையானுக்கு சேவை செய்ய 30 முதல் 40 பேருக்கு திருப்பதி தேவஸ்தானம் அனுமதி வழங்கி உள்ளது. ஸ்ரீவாரி சேவை செய்ய விருப்பம் உள்ள 60 வயதிற்கு உட்பட்ட ஆண் பக்தர்கள் மட்டும் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஆன்லைனில் தங்களது ஆதார் அட்டையை பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.