Tuesday, October 3, 2023
No menu items!
Homeதமிழக செய்திகள்ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர் தேர்தலில் நிற்க 10 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும்- சீமான்

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர் தேர்தலில் நிற்க 10 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும்- சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கள் விற்பதற்கு அனுமதி கொடுத்தால் டாஸ்மாக் வியாபாரம் சரிந்து விடும் என்பதற்காக அரசு அதற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறது. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. இரண்டு அரசுகளுமே கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக தான் செயல்படுகிறது. பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் அறிவித்து வருகிறார்கள். எல்லா தலைவர்களும் பேசுவார்கள். ஆனால் அதன் பின்னர் அவர்களுடனே போய் கூட்டணி வைத்திருப்பார்கள்.

மதுக்கடைகளை மூடினால் தான் கூட்டணி வைப்பேன் என்று கூறுவதற்கு தலைவர் இருக்கிறார்களா?. டாக்டர் ராமதாஸ் தான் அது போல் போராடினார். ஆனால் மறுபடியும் அவரும் கூட்டணி வைக்கும்போது மதுக்கடை பற்றி வாய் திறக்கவில்லை. இதனால் தான் நான் தனியாகவே போட்டியிடுகிறேன். கம்யூனிஸ்டு எங்கு இருக்கிறது? அது திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைக்களமாக மாறி உள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க.வை விட பெரிய கட்சி நான் தான். இங்கு அவர்கள் கட்சி தனித்து நின்று என் கட்சியை விட அதிக ஓட்டு வாங்குமா?. தேர்தலை நோக்கி தான் வேலை செய்கிறேன். தற்போது ஒரு பயணம் செல்கிறேன். 3 மாதம் கழித்து மீண்டும் சுற்றுவேன். மாற்றத்தை நிகழ்த்த வேண்டும். அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறோம்.

நமது மாநிலத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். 403 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட உத்தரபிரதேசத்தை பிரிக்க மறுக்கிறார்கள். ஏனெனில் மத்திய அரசின் ஓட்டுகள் பிரிந்து விடும் என்று நினைக்கிறார்கள். பா.ஜ.க. மீண்டும் மீண்டும் வரும். நாம் மாண்டு மாண்டு போக வேண்டியது தான். பா.ஜனதா இன்னொரு முறை ஆட்சிக்கு வந்தால் நாடு சுடுகாடாகிவிடும். நாட்டு நலன் என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்று சேர வேண்டும். காங்கிரஸ் தலைமையில் மற்ற தலைவர்கள் சேர்வதற்கு நம்பிக்கை இல்லாமல் உள்ளனர். அந்தந்த மாநில கட்சிகள் வலுப்பெற்றால் தான் இந்தியாவை யார் ஆள்வது என்று ஒன்று கூடி கூட்டாட்சியை கொண்டு வர வேண்டும்.

நான் பணத்தை நம்பவில்லை. நான் பிறந்த இனத்தை நம்பி தேர்தலில் நிற்கிறேன். எனது கோட்பாடுகளை ஏற்பவர்களுடன் கூட்டணி வைப்பேன். ஓட்டுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்ற என்னுடைய கருத்தை தான் நடிகர் விஜய் வலியுறுத்துகிறார். வாக்குக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர் தேர்தலில் நிற்பதற்கு 10 ஆண்டுகள் தடை என்ற உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்தால் அனைவரும் பயப்படுவார்கள். அப்போது தான் ஓட்டுக்கு பணம் கொடுப்பது நிற்கும். தமிழகத்திலேயே நடிகர் விஜய் தான் முதன்மையான நடிகர் அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகர். தமிழர்களுக்கு கோடிக்கணக்கான பிரச்சனைகள் இருக்கிறது. அதற்கு போராடுவதற்கு ஏராளமான தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். நடிகர் விஜய் வரட்டும் வரவேற்போம். எனக்கு யாருடைய துணையும் தேவையில்லை. நடிகர் விஜய் தான் என்னுடன் சேர்வது பற்றி முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments