திங்கள்நகரில் இருந்து அழகிய மண்டபம் செல்லும் சாலையில் உள்ள பரம்பை பகுதியில் இருந்த ரெயில்வே மேம்பாலம் இருவழி தடத்திற்காகவும், இரணியல் ரெயில் நிலையம் விரிவாக்க பணிகளுக்காகவும் சீரமைக்கப்பட்டது. இதனால் அந்த வழியிலான சாலை துண்டிக்கப்பட்டு சுமார் 2 வருடங்களாகி விட்டது. இதனால் பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். குளச்சல் பஸ் நிலையத்திலிருந்து குலசேகரம் வரை செல்லும் பஸ் அழகிய மண்டபம், மேக்காமண்டபம், வேர்கிளம்பி, உள்ளூர் திருவட்டாறு புத்தன் கடை வழியாக குலசேகரம் வரை செல்கிறது. இந்த பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளிகள், ரெயில் பயணிகள் என பலரும் சென்று வருகின்றனர். ஆனால் சாலை துண்டிக்கப்பட்டதால் பஸ் போக்குவரத்து இரணியல், ஆழ்வார் கோவில், வட்டம் வழியாக சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்கிறது.
இதனால் ரெயில்நிலையம், நெய்யூர் மருத்துவமனை வருபவர்கள், ஆலங்கோடு, மைலோடு ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இணைப்பு சாலையை அமைத்து, நெய்யூர் மருத்துவமனை, ரெயில் நிலையம், பரம்பை, ஆலங்கோடு, மைலோடு வழியாக அழகிய மண்டபம் தடத்திற்கு பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம், அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து குருந்தன்கோடு வட்டார காங்கிரஸ் துணைத் தலைவர் தேவதாஸ் கூறியதாவது:- இருவழி தடத்திற்கு வேண்டி நெடுஞ்சாலை துண்டிக்கப்படும் முன்பு ரெயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் பொது மக்கள் அவதிபடும் நிலை உள்ளது. இது கண்டிக்கதக்கது. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து இப்பகுதி மக்களின் போக்குவரத்துக்கு வசதி செய்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.