நாகர்கோவிலில் ஆணையருடன் பா.ஜனதா கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று புதிய அலுவலகத்தை திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். பின்னர் கவுன்சிலர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். குழு புகைப்படம் எடுத்தபோது காங்கிரஸ் எம்.பி. விஜய்வசந்த், எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் ஆகியோரும் பங்கேற்றனர். இதை பார்த்த பா.ஜனதா கவுன்சிலர்கள் விழா நிறைவடைந்ததும் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகனிடம் சென்று வாக்குவாதம் செய்தனர். ஏன் எனில் கவுன்சிலர்கள் மட்டும் பங்கேற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. பங்கேற்றுள்ளனர். அதே சமயம் பா.ஜனதா எம்.எல்.ஏ.வான எம்.ஆர்.காந்திக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை என்று கேட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து பா.ஜனதா கவுன்சிலர்களை ஆணையர் ஆனந்த் மோகன் சமாதானப்படுத்தினார். அதன்பிறகு பா.ஜனதா கவுன்சிலர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.