நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்திற்கு நுழைய முயன்ற காங்கிரசாரை பாரதிய ஜனதாவினர் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. மாறி மாறி இரு தரப்பினரும் கல்வீசி தாக்கி கொண்டனர். இதில் இரு தரப்பிலும் காயம் ஏற்பட்டது. இது குறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இளைஞர் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் கொடுத்த புகாரின் பேரில் பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்பட 22 பேர் மீது 8 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் பொது செயலாளர் ஜெகநாதன் கொடுத்த புகாரின் பேரில் காங்கிரஸ் நிர்வாகி டைசன் உட்பட 31 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். 5 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், நெல்லை மாவட்ட முன்னாள் தலைவர் மகாராஜன், குமரி மாவட்ட துணை தலைவர் சொக்கலிங்கம் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் டைசன், ஜோஸ்லின் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை 11-ந் தேதி வரை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட தலைவர் தர்மராஜை முதலில் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்க கொண்டு வந்தனர். அப்போது அங்கு பா.ஜ.க. நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாரதிய ஜனதா நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இன்று (புதன்கிழமை) மாலை மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நாகர்கோவில் வேப்பமூடு, ராஜாக்கமங்கலம், துவரங்காடு, மயிலாடி, திங்கள் சந்தை, தக்கலை ஆர்.டி.ஓ. அலுவலகம், புதுக்கடை, குலசேகரம் சந்தை, மேல்புறம், மார்த்தாண்டம் ஆகிய 10 இடங்களில் போராட்டம் நடக்கிறது. ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இருப்பினும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பாரதிய ஜனதாவினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.