திருவட்டார் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் தலைவர் ஜெகநாதன் தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யசோதா, கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் பீனாகுமாரி, உறுப்பினர்கள் அனிதா குமாரி, ஷீலா குமாரி, ஜெய சோபியா, ஜெயஸ்ரீ, ராம்சிங், ஷீபா, சகாய ஆன்றணி, ராஜூ, பிரேமசுதா ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய தலைவர் ஜெகநாதன் ஊராட்சி ஒன்றியத்தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு தெரியாமல், ஊராட்சியில் உள்ள வேலைகளை ஊராட்சி தலைவர் மற்றும் வரி வசூலிப்பவருடன் சென்று ஓவர்சியர், என்ஜினீயர் பார்வையிடுகிறார்கள். ஒன்றிய பொது நிதியில் மேற்கொள்ளப்படும் வேலைகள் குறித்து தவறாமல் இங்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.
உறுப்பினர் ராஜூ பேசுகையில், நமது ஊராட்சி ஒன்றிய பகுதியில் பல இடங்களில் பிளாட் போடுகிறார்கள். விசாரித்தால் பல பிளாட்டுகளுக்கு அனுமதி பெறவில்லை என தெரிகிறது என்றார். தலைவர் பேசுகையில், நம்முடைய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பிளாட்டுகள் போடப்படுவதாக இருந்தால் அது குறித்த தகவல் மன்றத்துக்கு வரவேண்டும். மேலும் பல இடங்களில் அனுமதி இல்லாத பிளாட்டுகள் விற்பனையாவதாக தெரிகிறது. எனவே அனுமதி இல்லாமல் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பிளாட்டு போடுவதற்கு தடைபோட வேண்டும் என்றார். அனைத்து உறுப்பினர்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்கிறோம், தீர்மானம் போடுவோம் என்றனர். இதனை தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் குலசேகரம், திற்பரப்பு, தச்சமலை, தோட்டமலை, மலவிளை, கல்லன்குழி, குறக்குடி, தோட்டவாரம், அண்டூர், இட்டகவேலி, உண்ணியூர்கோணம், முதலார், கேசவபுரம், தச்சூர், செருப்பாலூர், திரு வரம்பு, இரவிபுதூர்கடை, பூவன்கோடு, பேச்சிப்பாறை ஆகிய இடங்களில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்க ளை ரூ.8,60,000 செலவில் பழுது நீக்கம் செய்ய வேண்டும், ரூ.1½ லட்சம் செலவில் பாரதப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி கட்டிடம் சீரமைத்தல், மாத்தார், வீயன்னூர், செவரக்கோடு பள்ளிகளில் உள்ள பழுதடைந்த சத்துணவு மையங்களை இடித்து அகற்றவேண்டும், பாலமோர் ஊராட்சி கைகாட்டி சீபீல்டு சாலை காரி மணி எஸ்டேட்டின் அருகில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலம் அமைக்கவேண்டும், அனுமதி இல்லாமல் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பிளாட்டு போடுவதற்கு தடைபோட வேண்டும். அனுமதி இல்லாத பிளாட்டுகளை வாங்கி ஏமாறக்கூடாது என்ற விழிப்புணர்வுடன் கூடிய எச்சரிக்கை பலகை எல்லா ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பிளாட்டுகளின் அருகில் வைப்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.