Monday, June 5, 2023
No menu items!
Homeதமிழக செய்திகள்திறனறி தேர்வு… மாதந்தோறும் 1000 ரூபாய்… அரசுப் பள்ளி மாணவர்களுக்கான திட்டத்தை அறிவித்த முதலமைச்சர்

திறனறி தேர்வு… மாதந்தோறும் 1000 ரூபாய்… அரசுப் பள்ளி மாணவர்களுக்கான திட்டத்தை அறிவித்த முதலமைச்சர்

சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் “அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம்.(IITM)” திட்டத்தின் கீழ் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மின்னணு சார்ந்த செய்முறை பயிற்சிகள் அளிக்கும் வகையில், 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறை பெட்டகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வு என்ற புதிய திட்டத்தையும் அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- கல்வி என்பது அனைவருக்கும் சமமாகக் கிடைத்தால் அடுத்தடுத்து அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் சமமாகப் பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லைஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் திறன் வளர்ச்சிக்காகவும், பள்ளிகளில் தரமான கற்றல் சூழலை உருவாக்கும் வகையிலும் பல்வேறு வகையான முன்னெடுப்புகளை செய்து வருகிறோம்.

அனைத்துக் குழந்தைகளும் படிப்பதற்கான சிறந்த இடமாக அரசுப் பள்ளிகள் மாறி வருவது பெருமைக்குரியது. அனைவர்க்கும் கல்வி – அனைவர்க்கும் உயர்கல்வி என்பதை இலக்காகக் கொண்டுள்ளது தமிழ்நாடு அரசு. இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் முதன்மையான கல்வி நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது IITசென்னை. IIT சென்னையில் சேர்ந்து உயர்கல்வி பயில்வதே தம் வாழ்வின் இலட்சியமாக நினைத்து இலட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் கற்றல் திறன்களை மேம்படுத்தி வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனம், நம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையிலும் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், அறிவியல் சிந்தனைகளை வளர்க்கும் வகையிலும் நம் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து உருவாக்கியுள்ள திட்டமே “அனைவருக்கும் IITM”.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நாட்டிலுள்ள முன்னணிக் கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில்வதற்குத் தயார்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். எனது கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் தொடர்ச்சியான முன்னெடுப்புதான் இது. அனைவருக்கும் IITM திட்டத்தின் முதற்கட்டமாக, IIT சென்னையில் நான்காண்டுப் படிப்பாக வழங்கப்படும் B.S. Data Science and Applications (தரவுப் பயன்பாட்டு அறிவியல்) பட்டப்படிப்பில் சேர தமிழ்நாட்டிலுள்ள 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 87 மாணவர்களில் 45 மாணவர்கள் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் என்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவை அனைத்தும் சேர்ந்து பள்ளிக் கல்வித் துறையில் மாபெரும் அறிவுப்புரட்சிக்கு வித்திட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தி வரும் இது போன்ற திட்டங்களின் தொடர்ச்சியாக தற்போது “தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வுத் திட்டம்” என்ற மிக முக்கியமான புதிய திட்டத்திற்கான அறிவிப்பினை இந்த நிகழ்வில் வெளியிட்டு, அறிமுகம் செய்து தொடங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இத்திட்டத்தின் நோக்கம், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்துவதற்கும் அவர்கள் உயர்கல்வியைத் தொய்வின்றித் தொடர்வதற்கும் உதவி செய்வதே ஆகும். இந்த திட்டத்தின் வாயிலாக பத்தாம் வகுப்புப் பயிலும் (500 மாணவர், 500 மாணவியர்) 1000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் சென்னை ஐஐடி போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களுடன் தொடர்பினையும் வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். அவர்களுடைய பன்னிரண்டாம் வகுப்பினை நிறைவு செய்யும் வரை ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000/-வழங்கப்படும். இத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களுடைய இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பை தொடரும் போதும் ஒவ்வொரு ஆண்டும் ரூ.12,000/- வீதம் உதவித் தொகையும் பெறுவர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments