சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் நாளுக்கு நாள் விற்பனை சரிந்து வருகிறது. அதனை மேம்படுத்த தேவையான நிதி இல்லாததால் வியாபாரம் குறைகிறது. 3 வேளையும் மலிவு விலையில் உணவு விற்பனை செய்யப்படுவதால் ஆண்டுக்கு ரூ.140 கோடி மாநகராட்சிக்கு செலவாகிறது. ஆனால் அம்மா உணவகங்கள் மூலம் ரூ.20 கோடி மட்டுமே வருமானம் வருகிறது. இதனால் பெரும்பாலான அம்மா உணவகங்களில் கோதுமை மாவு வழங்கப்படாததால் இரவில் சப்பாத்தி விற்பனை செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக தக்காளி சாதம் விற்பனை செய்யப்படுகிறது. தற்போதைய ஆய்வின் படி 50 அம்மா உணவகங்கள் மிகவும் மோசமான வருவாயை ஈட்டி வருகின்றன. அங்கு தினமும் ரூ.100, ரூ.150-க்கு மொத்தமே விற்பனை ஆகிறது. மிக குறைந்த அளவில் மக்கள் அங்கு வருவதால் விற்பனை சரிந்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் மொத்தமாக நடைபாதை கடைகளுக்கு விற்பனை செய்வதாகவும் இதனால் பொதுமக்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. இதையடுத்து அம்மா உணவகத்தில் யார்? யார்? சாப்பிடுகிறார்கள் என்ற விவரத்தை சேகரிக்க ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதுதொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், அம்மா உணவகங்களில் சாப்பிட வருவோரிடம் 21 கேள்விகள் கேட்டு அதனை பதிவாக பதிவு செய்து அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. கட்டுமான தொழிலாளர்களா? அரசு, தனியார் நிறுவன ஊழியர்களா?, 60 வயதுக்கு மேற்பட்டவரா, சொந்த வீட்டில் வசிப்பவரா, அல்லது வாடகை வீட்டில் வசிப்பவரா, எத்தனை வேளை சாப்பிடுகிறார், என்ன காரணத்திற்காக அங்கு சாப்பிடுகிறார் என்பது போன்ற விவரங்களை சேகரித்து அனுப்புகிறார்கள். தமிழகத்தை சேர்ந்தவரா, பிற மாநிலத்தவரா, என்ன வேலை செய்கிறார் என்ற தகவல் பெறப்படுகிறது. அம்மா உணவகத்தை மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கட்டுமான தொழிலாளர்கள் சாப்பிட்டால் அதற்கான தொகையை கட்டுமான வாரியத்திடம் வசூலிக்கலாம் என அரசு பரிசீலிக்கிறது.