திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 28-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி நேற்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. முன்னதாக நேற்று அதிகாலை மூலவரை சுப்ரபாதத்தில் துயிலெழுப்பி தோமால சேவை, சஹஸ்ர நாமர்ச்சனை நடந்தது. அதன் பிறகு மூலவர்கள் மீது பட்டு வஸ்திரம் போர்த்தப்பட்டு காலை 6.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது. கோவிலின் மூலவர் சன்னதியில் இருந்து மகா துவாரம் வரை அனைத்துச் சன்னதிகளும், தூண்கள், மாடங்கள், சுவர்கள், மேற்கூரைகள் என அனைத்தும் தூய தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், குத்து விளக்குகள் தூய்மைப்படுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து மஞ்சள், குங்குமம், சந்தனம், சீயக்காய், நாமக்கட்டி, பச்சை கற்பூரம், கிச்சிலி கட்டை, கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது போன்ற நறுமணப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட சுகந்த திரவியம் மூலவர் கருவறை சுவர்கள், மாடங்கள், மேற்கூரைகள், தூண்கள் ஆகியவற்றில் பூசப்பட்டது. அதன்பின் மூலவர் மீது போர்த்தப்பட்ட பட்டு வஸ்திரம் அகற்றப்பட்டு சிறப்புப்பூஜைகள் செய்து, நைவேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தில் கோவில் துணை அதிகாரிகள் நாகரத்தினா, கோவிந்தராஜன், உதவி அதிகாரி மோகன், கோவில் சூப்பிரண்டு ரமேஷ், அர்ச்சகர் ஆனந்தகுமார் தீட்சிதலு மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருப்பதி கோதண்டராமர் கோவிலுக்கு ஐதராபாத்தைச் சேர்ந்த பக்தர் பிரசன்னாரெட்டி மற்றும் திருப்பதியைச் சேர்ந்த பக்தர் மணி ஆகியோர் 4 படுதாக்கள் மற்றும் திரைச்சீலைகளை காணிக்கையாக வழங்கினர்.