Sunday, September 24, 2023
No menu items!
Homeஉலக செய்திகள்ஆஸ்திரேலியாவில் பழங்குடியின மக்களின் உரிமைகளை நிர்ணயிக்க வாக்கெடுப்பு.. களம் அமைத்தார் அல்பானீஸ்

ஆஸ்திரேலியாவில் பழங்குடியின மக்களின் உரிமைகளை நிர்ணயிக்க வாக்கெடுப்பு.. களம் அமைத்தார் அல்பானீஸ்

ஆஸ்திரேலியாவில் பழங்குடியினரின் உரிமைகள் தொடர்பான ஒரு வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்பிற்கு வழிவகுக்கும் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் பல நூற்றாண்டுகளாக வாழும் பழங்குடியின மக்கள் அபோரிஜின்ஸ் (Aborigins)எனப்படுவர். இவர்களுக்கு இதுவரை அரசியலமைப்பு ரீதியாக அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் தேசிய கொள்கை வகுப்பில் எந்த பங்களிப்பும் இன்றி இருந்து வருகின்றனர். அதை மாற்றும் முயற்சியின் முதல்படியாக, பழங்குடியின மக்கள் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவில் வசிக்கும் மக்களுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கவேண்டுமா? என்பதை தீர்மானிக்க அந்நாட்டு மக்களிடையே ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்திற்கு பிறகு பாராளுமன்ற மேலவையான செனட் சபையில் நடந்த இறுதி வாக்கெடுப்பில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 52 பேரும் எதிராக 19 பேரும் வாக்களித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவில் வசிக்கும் மக்களை பாதிக்கும் விஷயங்களில், பாராளுமன்றத்திற்கு ஆலோசனை வழங்கக்கூடிய “பாராளுமன்றத்திற்கான குரல்” என்ற ஒரு ஆலோசனை குழுவை அமைப்பதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதை ஆஸ்திரேலியர்கள் ஆதரிக்கிறார்களா, இல்லையா என இந்த வாக்கெடுப்பின் மூலம் மக்களிடம் கேட்டறியப்படும்.

இது குறித்து பேசியுள்ள பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ‘பாராளுமன்றங்கள் சட்டங்களை இயற்றுகின்றன. ஆனால் மக்கள்தான் வரலாற்றை உருவாக்குகிறார்கள். இது உங்கள் நேரம், உங்கள் வாய்ப்பு; சரித்திரம் படைப்பதில் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பு. இப்போது, ஆஸ்திரேலிய மக்களுக்கு நல்லிணக்கத்திற்கு ‘ஆம்’ என்றும், ‘முதல் நாடுகளின் மக்களுக்கான’ அங்கீகாரத்திற்கு ‘ஆம்’ என்றும் சொல்ல வாய்ப்பு கிடைக்கும்’ என்றார். வாக்கெடுப்புக்கான தேதியை அல்பானீஸ் இன்னும் நிர்ணயிக்கவில்லை என்றாலும், இந்த ஆண்டு இறுதிக்குள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை 26 மில்லியன் ஆகும். இதில் பழங்குடி ஆஸ்திரேலியர்கள் சுமார் 3% இருக்கிறார்கள். ஆனால், அதிகாரப்பூர்வ தரவுகள், அந்நாட்டின் சிறைவாசிகளில் கால் பகுதி இவர்களை கொண்டது என்றும், சிறிய குற்றங்களுக்காகவே பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கிறது. ஆஸ்திரேலிய பழங்குடியினரின் 3ல் ஒரு பங்கு மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். பல வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்ததும், லத்தீன் சட்டப்பூர்வ வார்த்தையான “டெர்ரா நுல்லியஸ்” (நிலம் யாருக்கும் சொந்தமில்லை) என்று ஒரு கொள்கையை பயன்படுத்தி பூர்வீக ஆஸ்திரேலியர்களின் நிலத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்த பொது வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டால், குறைந்தபட்சம் 60,000 ஆண்டுகளாக இக்கண்டத்தில் வாழ்ந்து வரும் ஆஸ்திரேலிய பழங்குடியினத்தவர்கள், முதல் முறையாக அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்படுவார்கள். இதனால் இந்த வாக்கெடுப்பு ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம், அரசியலமைப்பு சட்டம் வழங்கும் உரிமையின் காரணமாக, இவர்களை பாதிக்கும் சட்டங்கள் குறித்து இவர்களை கலந்தாலோசித்தாக வேண்டும் என்ற உரிமை இவர்களுக்கு கிடைக்கும். இருப்பினும் கணிப்புகளின்படி, பெரும்பாலானோரின் ஆதரவு இருந்தாலும், இது குறித்த சர்ச்சைகள் விவாதங்கள் கடுமையாவதை தொடர்ந்து, இந்த மசோதாவிற்கிருந்த ஆதரவு குறைய தொடங்குவதாக தெரிகிறது. பழங்குடிப் பெண்ணும், ஆளும் தொழிற்கட்சி செனட்டருமான ‘மலர்ண்ட்ரி மெக்கார்த்தி பாராளுமன்றத்தில் பேசும்போது, “அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்கிற எளிமையான வேண்டுகோள் இது. பெரும்பாலான மக்கள் இது நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்” என கூறினார். வாக்கெடுப்பில் “இல்லை” என்று வாக்களிக்குமாறு எதிர்க்கட்சியான லிபரல் கட்சி மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் பேசும்போது, “ஆம்” என்கிற வாக்கு, நாட்டையே இன ரீதியாகப் பிளவுபடுத்தும் என்று கூறினார். “அனைத்து ஆஸ்திரேலியர்களும் சமம், ஆனால் சில ஆஸ்திரேலியர்கள் மற்றவர்களை விட சமமாக இருப்பார்கள என ஒரு ‘ஆர்வெல்லியன் விளைவு’ இதனால் ஏற்படுத்தப்படும்” என்று அவர் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே கூறியிருந்தார். பசுமைக் கட்சித் தலைவர் ஆடம் பேண்ட் பேசும்போது, இக்கருத்தை இனவெறி நாயின் ஒலிச்சத்தம் என கண்டனம் தெரிவித்தார். ஆனால் சில பழங்குடி ஆர்வலர்கள் இந்த “ஆஸ்திரேலியர்கள் குரல்” அமைப்பின் தகுதி குறித்து சந்தேகக் கேள்வி எழுப்பியுள்ளனர். சுதந்திரமான செனட்டர், ‘லிடியா தோர்ப்’ பேசும்போது “இது ஒரு சக்தியற்ற ஆலோசனை அமைப்பு” என கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக இதுவரை 44 முன்மொழிவுகள் வைக்கப்பட்டுள்ளது. அதில், 19 முன்மொழிவுகள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டன. அதிலும், 8 மட்டுமே மக்கள் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடைசியாக 1999ல் வாக்கெடுப்பு நடந்தது. இதில் குடியரசை நிறுவுவதை ஆஸ்திரேலியர்கள் நிராகரித்தனர். வாக்கெடுப்பில் வெற்றிபெற, அரசாங்கம் இரட்டைப் பெரும்பான்மையை பெற வேண்டும், அதாவது நாடு முழுவதும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் மற்றும் ஆறு மாநிலங்களில் குறைந்தபட்சம் நான்கு மாநிலங்களில் உள்ள பெரும்பான்மை வாக்காளர்கள் இந்த மாற்றத்தை ஆதரிக்க வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments