Sunday, September 24, 2023
No menu items!
Homeஇந்தியா செய்திகள்அஜித்பவார் இணைந்ததால் எனது பதவிக்கு ஆபத்து எதுவும் இல்லை: ஏக்நாத் ஷிண்டே

அஜித்பவார் இணைந்ததால் எனது பதவிக்கு ஆபத்து எதுவும் இல்லை: ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்தநிலையில் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாநில அரசில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் இணைந்தார். அவர் துணை முதல்-மந்திரியாகவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்று அரசியல் அரங்கை அதிர வைத்தனர். தற்போது மகாராஷ்டிராவில் ஷிண்டே- பட்னாவிஸ்- அஜித்பவார் ஆகியோரை கொண்டே 3 கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. ஆட்சியில் அஜித்பவார் இணைந்தது சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக அஜித்பவார் வருகையால் தங்களுக்கு கிடைக்க இருந்த முக்கிய இலாகா, மந்திரி பதவி கிடைக்காமல் போய்விடும் என்ற கலக்கம் அவர்கள் இடையே நிலவி வருவதாக கூறப்படுகிறது. மேலும் அஜித்பவாரின் அதிரடி வருகை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் பதவியை ஆட்டம் காண வைக்கும் என்று பரவலாக பேசப்படுகிறது.

இதையடுத்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை கடந்த புதன்கிழமை இரவு சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தனது எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை ஏக்நாத் ஷிண்டே சமாதானப்படுத்தினார். இதற்கு மத்தியில் மந்திரி பதவி கிடைக்கும் என்று காத்திருந்த சிவசேனாவை சேர்ந்த 8 முதல் 10 எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் தவறு செய்ததை உணர்ந்து உத்தவ் தாக்கரேவுடன் பேசி வருவதாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர் விநாயக் ராவத் அணுகுண்டை தூக்கி போட்டுள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல்-மந்திரியின் ‘வர்ஷா’ பங்களாவில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சந்திப்பு நடந்தது. இதில் சில முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. குறிப்பாக சிவசேனா தரப்பு கவலைகளை தேவேந்திர பட்னாவிசிடம் முதல்-மந்திரி ஷிண்டே விரிவாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் அவர்களின் சந்திப்பு பின்னணியில் வேறு தடாலடி விஷயங்கள் எதுவும் இருக்குமா? என்ற பரபரப்பும் எகிறி உள்ளது. இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கூட்டணி அரசில் அஜித்பவார் இணைந்ததால் எனது பதவிக்கு ஆபத்து எதுவும் இல்லை. நான் பதற்றத்தில் இருப்பதாக கூறுவதில் உண்மை இல்லை. எனது தலைமையிலான சிவசேனாவும், பா.ஜனதாவும் சித்தாந்தத்தால் ஒன்றுப்பட்டது. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் என்னை முதல்-மந்திரியாக்கினர். தற்போது எங்களது அரசில் அஜித்பவார் இணைந்துள்ளார். இதனால் நாங்கள் பலமடைந்து உள்ளோம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 45 தொகுதிகளை நாங்கள் கைப்பற்றுவோம். மோடியை 3-வது முறையாக பிரதமர் ஆக்குவோம். சரத்பவார் 1978-ம் ஆண்டு வசந்த்ததா பாட்டீல் ஆட்சியை கவிழ்த்து முதல்-மந்திரி ஆனார். 1999-ம் ஆண்டு காங்கிரசில் பிளவை ஏற்படுத்தினார். 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க முயன்ற சரத்பவார், பின்னர் ‘யு-டர்ன்’ அடித்ததாக அஜித்பவாரே தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments