Monday, March 27, 2023
No menu items!
Google search engine
Homeகுமரி செய்திகள்மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நள்ளிரவில் நடந்த ஒடுக்கு பூஜையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நள்ளிரவில் நடந்த ஒடுக்கு பூஜையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு பெண்கள் இருமுடி கட்டி வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள். இதனால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் மாசி ெகாடை விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு வழிபாடு, அம்மன் வெள்ளிப்பல்லக்கில் வீதிஉலா வருதல், சமய மாநாடு, யானை மீது சந்தன குடம் பவனி, வில்லிசை, கலை நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி தினமும் குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டனர்.

திருவிழாவில் நிறைவு விழா நேற்று நடந்தது. நேற்று அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோவிலில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடந்தது. 4.30 மணிக்கு அடியந்திர பூஜையும், காலை 6 மணிக்கு குத்தியோட்டமும் நடந்தது. மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா வருதல், 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி, 9 மணிக்கு அத்தாழ பூஜை, இரவு 10 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல் போன்றவை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஒடுக்கு பூஜை தொடங்கியது. இதற்காக மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சாஸ்தான் கோவிலில் இருந்து 21 வகையான உணவு பதார்த்தங்கள் 9 மண்பானைகள் மற்றும் பெட்டிகளில் வைக்கப்பட்டு பூசாரிகள் கோவிலுக்கு பவனியாக கொண்டுவந்தனர். அத்துடன் 2 குடம் தேனும் எடுத்து வரப்பட்டது.

இவற்றை வாயில் சிவப்பு துணியை கட்டிய நிலையில் பூசாரிகள் தலையில் சுமந்து வந்தனர். உணவு பதார்த்தங்கள் வெள்ளை துணியால் ஒரே சீராக போர்த்தப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஒடுக்கு பவனி கோவிலை ஒரு முறை வலம் வந்ததும் உணவு பதார்த்தங்கள் ஒவ்வொன்றாக அம்மன் முன்பு இறக்கி வைக்கப்பட்டது. இதற்கிடையே குருதி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அதை தொடர்ந்து நள்ளிரவில் ஒடுக்கு பூஜையும் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. தீபாராதனை நடந்து கொண்டிருக்கும்போதே கொடி மரத்தில் இருந்த கொடி இறக்கப்பட்டது. விழாவையொட்டி நேற்று மண்டைக்காடு கோவிலில் ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்து குடும்பத்துடன் குவியத் தொடங்கினார்கள். அவர்கள் கோவில் வளாகத்திலும், அருகில் உள்ள தென்னந்தோப்புகளிலும் கூடி பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். இதனால் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளிலும், கடற்கரையிலும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது.

பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்கியது. அது போல் கேரள அரசு போக்குவரத்துக் கழகமும் சிறப்பு பஸ்களை இயக்கியது. திருவனந்தபுரம், தக்கலை, மார்த்தாண்டம், திங்கள்சந்தை போன்ற பகுதிகளில் இருந்து வந்த பஸ்கள் நடுவூர்க்கரை தற்காலிக பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. நாகர்கோவில் பகுதியில் இருந்து வந்த பஸ்கள் புதூர் அருகில் நிறுத்தப்பட்டிருந்தது. விழாவையொட்டி குமரி மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்து. மண்டைக்காட்டில் நேற்று பக்தர்கள் அதிகமாக குவிந்ததால் பாதுகாப்பிற்கு கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டனர். கடற்கரையில் பக்தர்கள் கால் நனைக்கும் பகுதியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யாகுமார் தலைமையில் நீச்சல் பயிற்சி பெற்ற சிறப்பு தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments