கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த 50 பேர் ஒரு பஸ்சில் கன்னியாகுமரிக்கு நேற்று இரவு சுற்றுலா வந்தனர். அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் ரதீஷ் (வயது 30) என்பவர் அவரது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அவரது மனைவி மது குடிப்பதற்கு அவருக்கு பணம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரதீஷ் தான் தங்கியிருந்த லாட்ஜின் 3-வது மாடிக்கு ஏறி சென்று குதித்து தற்கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார். இதைபார்த்த அந்த லாட்ஜில் தங்கி இருந்த அவருடன் வந்த மற்றவர்கள் இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி போலீசாரும் தீயணைக்கும் படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3-வது மாடியில் இருந்த அவரை உயிருடன் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு 3-வது மாடியில் இருந்த அவர் முதல் மாடிக்கு இறங்கி வந்தார். அங்கு இருந்த படியும் அவர் கீழே குதித்து தற்கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். கடைசியாக முதல் மடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது கால் முறிந்தது. உடனே அவரை போலீசரும், தீயணைக்கும் படையினரும் மீட்டு கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி கன்னியாகுமரி போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவருக்கு மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.