கேரள மாநிலம் வயநாடு சுல்தான் புத்தேரியை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (வயது 34). இவர் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சிறு வயதிலேயே நிறையபேர் இதய நோயால் இறந்து வருவதால், அதை தடுக்க உடற்பயிற்சி அவசியம் என்பதை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கேரள மாநிலம் வயநாடு முதல் கன்னியாகுமரி வழியாக காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் வரை நடை மற்றும் ஓட்டமாக செல்லும் விழிப்புணர்வு பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்தார். அதன்படி அவர் கடந்த 11-ந்தேதி விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார்.
திருவனந்தபுரம், நாகர்கோவில், கொட்டாரம் வழியாக நேற்று கன்னியாகுமரி வந்தார். இன்று காலை 7 மணிக்கு அவர் கன்னியாகுமரி பெரியார் நகரில் இருந்து ஓட்டமாக புறப்பட்டு சென்றார். இவருடன் அவரது மனைவியும், மனைவியின் சகோதரனும் செல்கின்றனர். கன்னியாகுமரியில் இருந்து தனது ஓட்டப்பயணத்தை தொடங்கிய அவர் நெல்லை, மதுரை, சேலம், பெங்களூர், மும்பை வழியாக ஸ்ரீநகர் சென்று முடிக்க உள்ளார். ஒரு நாளைக்கு 60 கிலோ மீட்டர் முதல் 70 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடி 2 மாதங்களில் ஸ்ரீநகரை சென்றடைய திட்டமிட்டுள்ளார். மொத்தம் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை ஓடியே கடக்க உள்ளார்.