குளச்சல் அருகே பெத்தேல்புரம் படுவாக்கரையை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி ஜெசிமோள் (வயது 51). இவரது பக்கத்து ஊர் வர்த்தான்விளையை சேர்ந்தவர் ஜாண் சுந்தர் சிங் என்ற கென்னடி (55), ெரயில்வே ஊழியர். கடந்த அக்டோபர் மாதம் இங்கு ஆலய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. தேர்தலில் கென்னடி மனைவி ஜெனிட்டா செயலாளர் பதவிக்கு போட்டியிட்டார். அப்போது கென்னடி ஜெனிட்டாவுக்கு ஆதரவாக செயல்பட ஜெசிமோளிடம் கூறினார். இதனை ஜெசிமோள் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கென்னடிக்கு ஜெசிமோள் மீது முன் விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 9-ந்தேதி ஜெசிமோள் வீட்டு முன் நிற்கும்போது அங்கு வந்த கென்னடி, அவரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஜெசிமோள் இரணியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை பரிசீலித்த கோர்ட் கென்னடி மீது வழக்குப்பதிவு செய்ய குளச்சல் போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் கென்னடி மீது பெண் வன்கொடுமை உள்பட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.