ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியில் அடிக்கடி கொள்ளை சம்பவம் நடந்து வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இந்நிலையில், பூதலப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிபிரசாத் மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி சென்றனர். புளியம்பட்டியை சேர்ந்த அய்யப்பா, அவரது மனைவி பூமதி மற்றும் 4 பெண்களை கைது செய்தனர். அவர்களை பூதலப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அய்யப்பாவும் அவரது மனைவி பூமதி ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். 4 பெண்கள் அவரது வக்கீல் முன்னிலையில் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அரசு ஆஸ்பத்திரி டாக்டரிடம் சிகிச்சை பெற்ற பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்தார். பூதலப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ஹரிபிரசாத், ஏட்டு தணிகாசலம் மற்றும் 4 போலீசார் தங்களை சித்தூர் போலீஸ் பயிற்சி மையத்தில் ஒரு அறையில் அடைத்து வைத்து தொல்லை கொடுத்தனர். உடலில் மிளகாய்ப் பொடியை தூவினர், அதனால் தான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக அந்த பெண் கூறினார். இது குறித்து பெண் டாக்டர் ஒருவர் சித்தூர் போலீஸ் சூப்பிரண்டு ரிஷாந்த் ரெட்டியிடம் போனில் புகார் செய்தார். அதன் பேரில் நகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்தார். மேலும் விசாரணை அதிகாரியாக சித்தூர் ஏ.எஸ்.பி.சுதாகர் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கில் ஆந்திர மாநில சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.