தேங்காய்பட்டணம் மீன் பிடித் துறைமுகம் பிரதான அலை தடுப்பு சுவர் நீட்டிப்பு பணியின் செயல்பாடு மற்றும் முன்னேற்றத்தை கண்காணிக்க குழு அமைப்பு தொடர்பாக நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரீதர் தலைமை யில் மீனவ பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் மீன்வளத்துறை துணை இயக்குனர் காசிநாத பாண்டியன், உதவி இயக்குனர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மீனவ பிரதிநிதிகள் கூறியதாவது:- தேங்காய்பட்டணம் துறைமுகத்திலிருந்து இரையுமன்துறை, தூத்தூர் மண்டலங்களை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். இந்த மீன்பிடி துறைமுகத்தில் முகப்பு தோற்றத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் மிகப்பெரிய முறை கேடு நடந்துள்ளது. அரசின் வரைபடத்தின் படி கற்கள் அங்கு அமைக்கப்படவில்லை.
சிறிய சிறிய கற்கள் போடப்பட்டு வருவதால் ராட்சத அலைகள் அந்த கற்களை இழுத்துச்சென்று விடுகிறது. ஏற்கனவே தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் 28 பேர் பலியாகி உள்ளனர். இனி ஒரு உயிர் விபத்து ஏற்பட்டால் அதற்கு அதிகாரிகளே முழு பொறுப்பேற்க வேண்டும். மீனவர்கள் பலியானால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இன்னும் உயிரிழப்பு நடைபெறாமல் தடுக்கும் வகையில் அதிகாரிகள் பணியை துரிதப்படுத்த வேண்டும். ஜூன், ஜூலை மாதத்தில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும். அதற்குள் மீதமுள்ள பணிகளையும் முடிக்க வேண்டும். கண்காணிப்பு அதிகாரியை மாற்ற வேண்டும். பணியை கண் காணிக்க இரையுமன்துறை மண்டலத்தில் உள்ள 15 கிராமங்களில் இருந்து ஒவ்வொரு பிரதிநிதிகளையும் தூத்தூர் மண்டலத்தில் உள்ள 8 கிராமங்களில் இருந்து ஒவ்வொரு பிரதிநிதி கள் என 5 பிரதிநிதிகள் கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும். மேலும் தேங்காய் பட்டணம் துறைமுகத்தி லிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே குமரி மாவட் டத்தில் உள்ள மற்ற துறைமுகங்களிலிருந்தும் விழிஞ்சம், கொச்சி போன்ற துறைமுகங்களில் இருந்தும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வசதியாக அனுமதி பெற்று தர வேண்டும் என்று கூறி னார்கள். இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் பதிலளித்து கூறியதாவது:- தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் சீரமைப்பு பணிகள் வரைபடத்தின்படி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தரமான கற்கள் போடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தினமும் 100 லோடு கற்கள் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். தூத்தூர், இரையுமன் துறை மண்டலத்தில் உள்ள 15 மீனவ கிராமங்களிலும் ஒவ்வொரு மீனவ பிரதிநிதிகளை வைத்து குழு அமைக்கப்படும். அந்த குழுவின் கூட்டத்தை கூட்டி ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.