கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பனையில் ஏராளமான உடலுக்கு பயன் அளிக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன. மருத்துவ குணம் கொண்ட ஏராளமான ஊட்டச்சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது பனை மரம்.ரசாயனம், உரம் போன்ற எந்த வேதிப்பொருளும் சேர்க்காமல் பயன் தரக்கூடிய பனை மரம் ஏராளமான பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் கள் மென்மையானது என்பதால் தாய்ப்பாலுக்கு இணையான பானம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு பனை மரத்தில் இருந்தும் நன்மை பயக்கக்கூடிய ஏராளமான உணவுப் பொருட்களும் உள்ளன. பனை மரத்தில் இருந்து கள், பதனீர், பனை வெல்லம், பனம் பழம், பனக்கிழங்கு, விசிறி, நுங்கு ஆகியவை கிடைக்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 01.01.1987-ம் ஆண்டு முதல் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 35 ஆண்டு காலமாக கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்கக்கோரி பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலும் கள் இயக்கம் சார்பில் கள் தடை செய்யப்பட்ட போதை பொருள் என்று நிரூபித்தால் ரூ.10 கோடி வழங்கப்படும் என்றும் பரிசு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் கள் இறக்குவதற்கான ஆதரவு குரல்கள் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் அமைச்சர் முத்துசாமி கள் இறக்க அனுமதி வழங்குவது குறித்து குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் கள் இறக்க அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு கள் இயக்க ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- ‘கள்’ தமிழ் மண்ணின் அடையாளம். சங்க காலத்தில் அரசர்களும், புலவர்களும், ஆன்றோர்களும், சான்றோர்களும், ஆண்களும், பெண்களும் உடன் அமர்ந்து உண்ட உணவின் ஒரு பகுதி கள். அதியமான், அவ்வையார் ஆகியோரும் கள் குடித்ததற்கான சான்று புறநானூற்று பாடலில் உள்ளது. அதியமான் இறந்த பின்பு அவரது நடுக்கல்லுக்கு கள் படையல் வைத்து வழிபட்டுள்ளனர். இதன் மூலம் கள் உணவுப் பொருளாகவும், படையல் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பாரி வள்ளல் பரம்பு மலை மீது புலவர்களுக்கு அதிக அளவில் கள் கொடுத்துள்ளார். அந்த கள் பரம்பு மலை பாறைகள் மீது வழிந்தோடியதாக கூறப்படுகிறது. அரசியல் அமைப்பு சட்டப்படி கள் இறக்குவதும், பருகுவதும் உணவு தேடும் உரிமையாகும். 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இதில் 47-வது பிரிவு மது விலக்கு மற்றும் மது கொள்கையில் கள்ளுக்கு தடை விதிக்கக் கூடாது, அரு மருந்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் 01.01.1987-ம் ஆண்டு கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் இந்த தடை விதிக்கப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆரே கள் ஆதரவாளர்தான். அவர் எழுதிய புத்தகத்தில் நான் சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட நோயிலிருந்து தப்பிக்க கள் பருகினேன். இதனால் அந்த நோயிலிருந்து மீண்டேன் என குறிப்பிட்டுள்ளார். கடந்த 18 ஆண்டுகளாக கள் இறக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி நாங்கள் போராடி வருகிறோம். கள் உணவின் ஒரு பகுதி. கள் தடை செய்யப்பட்ட போதை பொருள் என்று நிரூபித்தால் ரூ.10 கோடி தருவதாக கூறினோம். ஆனால் யாரும் எங்களிடம் விவாதம் செய்ய வரவில்லை.