சென்னையை அழகுபடுத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கார சென்னை திட்டத்தை அறிமுகம் செய்தார். அவர் மேயராக இருந்த போது இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு ஏராளமான மேம்பாலங்கள், பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. இதையடுத்து சிங்கார சென்னை 2.0 திட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது. சிங்கார சென்னை 2.0 திட்டம் 2026-ம் ஆண்டு நிறைவுபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை சிறப்பாக அமல்படுத்த சென்னை மற்றும் புறநகர் பகுதி எம்.எல்.ஏ.க்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்த கருத்துபடி சென்னையை அழகுபடுத்தும் பணிகள் நடந்துவருகின்றன.
இதற்கிடையே சென்னையை அழகுபடுத்தும் 3-வது திட்டம் உலக வங்கி நிதி உதவி மூலம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த 3-வது திட்டத்துக்கான பணிகள் வகுக்கப்பட்டு வருகின்றன. 3-வது திட்டத்தில் சுற்றுச்சூழல், துடிப்பான பொருளாதாரம் மற்றும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய முழுமையான வளர்ச்சிக்கு ஏற்ப பணிகளை தயாரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவே இதுதொடர்பாக பயிலரங்கங்களும் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று அமைச்சர் சேகர் பாபு தலைமையில் 3-வது திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடந்தது.
இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த 26 எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.கணபதி, ஜோசப் சாமுவேல், கே.பி.சங்கர், ஜே.ஜான் எபினேசர், ஆர்.டி.சேகர், திரு.ஏ.கிருஷ்ணசாமி, தாயகம் கவி, ஐ.பரந்தாமன், ஐட்ரீம் மூர்த்தி, டாக்டர் என்.எழிலன், ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, ஜெ.கருணாநிதி, த.வேலு, ஜே.எம்.எச்.அசன் மவுலானா, எஸ்.அரவிந்த ரமேஷ், இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, மற்றும் உயர் அலுவலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதியில் செய்யப்பட வேண்டிய சிங்கார சென்னை திட்டத்தை பற்றிய கருத்துக்களை எடுத்துரைத்தனர். காசிமேடு கடற்கரை, மயிலாப்பூர் ஸ்டேடியம் மற்றும் உணவகங்கள், பூங்காக்கள் பற்றி நிறைய கருத்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து இந்த திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவதற்காக தலா 6 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு தலைமை திட்ட அதிகாரியை அமைச்சர் சேகர்பாபு நியமனம் செய்து அறிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் சிங்கார சென்னை திட்டப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் படி சென்னையில் உள்ள ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 5 விதமான அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பாலங்கள் அமைத்தல், கூடுதல் பூங்காக்களை ஏற்படுத்துதல், பள்ளி விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துதல், சந்தைகளை நவீனப்படுத்துதல், வணிக வளாகங்களை உருவாக்குதல், உணவகங்கள், போக்குவரத்து சந்திப்புகளை அழகு படுத்துதல் போன்றவை மேற்கொள்ளப்படும். திட்டப்பணியாளர்கள் இதுபற்றி ஒவ்வொரு பகுதிகளையும் ஆய்வு செய்து அழகுபடுத்த வேண்டிய இடங்களை தேர்வு செய்து அறிவிப்பார்கள். அதன் பிறகு பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னையில் உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் கருத்துக்கள் பெறப்பட்டு சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் சென்னை நகரை அழகுபடுத்தும் பணிகள் தொடங்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இதற்காக அனைத்து பிரதிநிதிகளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.