Home » இந்தியா செய்திகள் » ஐதராபாத்தில் கால்நடை மருத்துவர் கற்பழித்து கொலை: வழக்கு பதிவில் தாமதம் செய்த போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம்
In-Hyderabad-Veterinary-Surgeon-Rape-Killed-Police-officers

ஐதராபாத்தில் கால்நடை மருத்துவர் கற்பழித்து கொலை: வழக்கு பதிவில் தாமதம் செய்த போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம்

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (வயது 27), 4 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடிய சம்பவம் நடந்த சூழல், நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது.

பிரியங்கா ரெட்டி, கடந்த 27-ந் தேதி அவசர பணி நிமித்தமாக மாதாப்பூர் கால்நடை மருத்துவமனைக்கு பணிக்கு சென்றுள்ளார். ஐதராபாத்தில் சம்சாபாத் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 2 சக்கர வாகனத்தில் சென்றவர், வழியில் ஒரு சுங்க சாவடி அருகே தனது வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கிருந்து கால்டாக்சியில் பணிக்கு சென்றுள்ளார்.

இரவு 9 மணிக்கு பணி முடித்து வீடு திரும்பும்போது 2 சக்கர வாகனத்தை எடுப்பதற்காக சுங்கசாவடி சென்றால், அங்கே அவரது இரு சக்கர வாகனம் பஞ்சராகி நிற்பதைக் கண்டார். அப்போது அவருக்கு உதவ வந்தவர்களுடன் சென்றவர்தான் காணாமல் போனார்.

மறுநாள் (28-ந் தேதி) காலையில் அவரது உடல் எரிக்கப்பட்ட நிலையில் கரிக்கட்டையாக ஐதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள சாத்நகரில் ஒரு பாலத்தின் அடியில் கண்டெடுக்கப்பட்டது. அவர் கற்பழித்து கொல்லப்பட்டு, அவரது உடல் எரிக்கப்பட்டது தெரிய வந்தது.

இந்த கொடிய சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரும் 29-ந் தேதி கைது செய்யப்பட்டு விட்டனர். அவர்கள் மாஜிஸ்திரேட்டு முன்பாக நேற்று முன்தினம் (சனிக்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்ட 4 பேரில் 2 பேர் லாரி டிரைவர்கள், 2 பேர் அவர்களின் உதவியாளர்கள் ஆவார்கள்.

அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376 டி (கும்பல் கற்பழிப்பு), 302 (கொலை), 201 (ஆதாரங்களை அழித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்களை மாஜிஸ்திரேட்டு முன்பாக ஆஜர்படுத்தி விட்டு, சிறைக்கு போலீசார் வேனில் அழைத்து சென்றபோது, அதைக் கண்டு கோபம் கொண்ட உள்ளூர் மக்கள் வேன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

பிரியங்கா ரெட்டி, கற்பழித்து கொல்லப்படுவதற்கு முன்பாக அவர் மாயமானபோது, அது தொடர்பாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்ய வந்தபோது, அவர்கள் அந்தப் பகுதியில் அமைந்துள்ள நகர்ப்புற போலீஸ் நிலையத்துக்கும், கிராமப்புற போலீஸ் நிலையத்துக்கும் மாற்றி மாற்றி அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்; சம்பவம் நடந்த பகுதி எந்த போலீஸ் நிலையத்தின் அதிகார எல்லைக்குள் வருகிறது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது; இதெல்லாம் நடக்காமல் உடனடியாக புகாரை பெற்று வழக்கு பதிவு செய்து, பிரியங்கா ரெட்டியை தேடும் வேட்டையை முடுக்கி விட்டிருந்தால் அவர் ஒரு வேளை உயிருடன் மீட்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி, வழக்கு பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதத்துக்கு காரணமான சம்சாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி குமார், ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலைய போலீஸ் நிலைய ஏட்டுகள் வேணுகோபால் ரெட்டி, சத்தியநாராயணா கவுடு ஆகிய 3 பேரும் பணியில் அசட்டையாக இருந்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதை சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.சஜ்ஜனர் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். புகார்கள் வருகிறபோது எந்த போலீஸ் நிலையத்தின் எல்லைக்குள் வருகிறது என்று பார்க்காமல், வழக்கு பதிவு செய்யுமாறு சைபராபாத் போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கு தக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக பிரியங்கா ரெட்டியின் குடும்பத்தினரை தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் சியாமளா குந்தர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அவர் ஒரு குழுவையும் அமைத்துள்ளதாக தெரிவித்தார்.

பிரியங்காவின் சகோதரிக்கு அரசு பணி வழங்குவதுடன், அவரது தந்தைக்கு மகபூப் நகரில் இருந்து ஐதராபாத்துக்கு உடனடியாக பணியிட மாற்றம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்தநிலையில் பிரியங்கா வழக்கில் கைதான 4 பேர் சார்பாக ஐதராபாத் மாவட்ட வக்கீல்கள் சங்கத்தை சேர்ந்த வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அந்த சங்கத்தின் தலைவர் மட்டப்பள்ளி சீனிவாஸ் தெரிவித்தார்.

இந்த கொடிய சம்பவத்தில் மாநில முதல்-மந்திரி சந்திரசேகரராவ் கண்டனம் தெரிவிக்காமலும், கருத்து கூறாமலும் இருப்பதற்கு சம்சாபாத் பொதுமக்கள் ஆதங்கம் வெளியிட்டனர்.

அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இல்யாசி, இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பொது இடத்தில் தூக்கில் போட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் கூறுகின்றன.