Home » உலகச்செய்திகள் » மாலியில் பயங்கரவாதிகள் தாக்குதல் 29 படை வீரர்கள் பலி
29-terrorists-killed-in-Mali-terror-attack

மாலியில் பயங்கரவாதிகள் தாக்குதல் 29 படை வீரர்கள் பலி

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மாலி.அங்கு இப்ராகிம் பவ்பக்கர் கெய்ட்டா அதிபராக உள்ளார்.மாலியைப் பொறுத்தமட்டில், துவாரெக் போராளிகள் குழு, 2012-ம் ஆண்டு நாட்டின் வடபகுதியை கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து அந்த நாடு நிலைகுலைந்து போனது.

மத அடிப்படையிலான பயங்கரவாதிகளும், லிபியா முன்னாள் அதிபர் கடாபியின் ஆதரவாளர்களும், பிரெஞ்சு தலையீடுகளும் மாலி நாட்டுக்கு பெருத்த சவால்களாக அமைந்துள்ளன.

அங்கு தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றுவருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இது அந்த நாட்டின் அமைதியை குலைத்து வருகிறது.

அங்கு காவோ நகருக்கு வடக்கே 125 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தார்கிண்ட் என்ற இடத்தில் ராணுவ தளம் ஒன்று இயங்கி வந்தது. அங்கு வீரர்கள் தங்கி இருந்து வழக்கமான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) அதிகாலை நேரத்தில் அங்கு பயங்கரவாதிகள் திடீரென புகுந்து குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடத்தினர்.

இந்த தாக்குதலை எதிர்பார்த்திராத படை வீரர்கள் நிலை குலைந்து போயினர்.யங்கரவாதிகள் தாக்குதலால் 2 வீரர்கள் பலியானதாக முதலில் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இந்த தாக்குதலில் 29 வீரர்கள் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 5 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் மத அடிப்படையிலான பயங்கரவாதிகள்தான் இந்த தாக்குதல்களை நடத்தி இருப்பார்கள் என்ற சந்தேகம் அங்கு எழுந்துள்ளது.