Home » இந்தியா செய்திகள் » டிரம்ப் வருகை: இந்திய-அமெரிக்க நட்புறவில் புதிய அத்தியாயம் – பிரதமர் மோடி பெருமிதம்
Trump-visit-New-chapter-in-IndoAmerican-friendship--PM

டிரம்ப் வருகை: இந்திய-அமெரிக்க நட்புறவில் புதிய அத்தியாயம் – பிரதமர் மோடி பெருமிதம்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். தனது மனைவி மெலனியா, மகள் இவாங்கா உள்ளிட்டோருடன் ஆமதாபாத் வந்திறங்கிய அவரை பிரதமர் மோடி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார். பின்னர் இரு தலைவர்களும் சபர்மதி ஆசிரமம் சென்றனர்.

அங்கிருந்து மொடேரா கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் (நமஸ்தே டிரம்ப்) பங்கேற்றனர். இந்த மைதானத்தில் சுமார் 1 லட்சம் பேர் திரண்டு டிரம்ப் குடும்பத்தினரை வரவேற்றனர்.

இந்த திரளான கூட்டத்தினர் மத்தியில் பிரதமர் மோடி அமெரிக்க ஜனாதிபதியை மகிழ்ச்சி பொங்க வரவேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்துக்கு உங்களை (டிரம்ப்) வரவேற்கிறேன். இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையான நண்பர்கள். இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவானது வெறும் மற்றுமொரு உறவு போன்றது அல்ல. மாறாக நமது உறவுகள் மிகப்பெரும் உச்சத்தை எட்டியுள்ளது. தனது குடும்பத்தினருடன் டிரம்ப் மேற்கொண்டிருக்கும் இந்த பயணமே அதை எடுத்துக்காட்டுகிறது.

டிரம்பின் இந்த பயணத்தின் மூலம் இந்தியா-அமெரிக்கா நட்புறவில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு இருக்கிறது. இந்த அத்தியாயம் இருநாட்டு மக்களின் வளம், வளர்ச்சியில் புதிய ஆவணமாக உருமாறும். கடந்த சில ஆண்டுகளாக இந்தியா-அமெரிக்கா இடையேயான நம்பிக்கை அதிகரித்து தற்போது வரலாற்று உச்சத்தை எட்டி இருக்கிறது.

இரு நாடுகளும் ஏராளமான அம்சங்களை பகிர்ந்து வருகின்றன. உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் (இந்தியா), பழமையான ஜனநாயகம் (அமெரிக்கா) இடையிலான உறவில் ஏராளமான பொது அம்சங்கள் உள்ளன.

இன்று இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி யாரென்றால், அது அமெரிக்காதான். இன்று இந்திய ராணுவம் அதிகப்படியான போர் பயிற்சிகளை மேற்கொள்வது எந்த நாட்டுடன் என்றால், அது அமெரிக்காதான். இன்று எந்த நாட்டுடன் இந்தியா விரிவான ஆய்வு மற்றும் வளர்ச்சி திட்டங்களில் இணைந்து பணியாற்றுகிறது என்றால், அதுவும் அமெரிக்கா தான். அப்படி ஒவ்வொரு மதிப் பிலும் எங்கள் நட்புறவு வளர்ந்து கொண்டே செல்கிறது.

இந்த பத்தாண்டுகளின் தொடக்கத்தில் நிகழ்ந்திருக்கும் டிரம்பின் இந்திய பயணம், ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகும். 21-ம் நூற்றாண்டில் புதிய சீரமைப்புகள், புதிய போட்டிகள், புதிய சவால்கள் மற்றும் புதிய வாய்ப்புகள் மாற்றத்துக்கான அடித்தளம் அமைக்கப்படுகின்றன. அந்தவகையில் இந்த பயணம் மூலம் புதிய வரலாறு படைக்கப்படுகிறது.

இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவும், ஒத்துழைப்பும் 21-ம் நூற்றாண்டில் உலகின் போக்கை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகின் அமைதி, வளம் மற்றும் பாதுகாப்பில் இரு நாடுகளும் ஒரு வலிமையான பங்களிப்பை செய்ய முடியும்.

ஒரே ராக்கெட்டில் அதிக செயற்கைக்கோள்களை அனுப்பி உலக சாதனை படைத்தது மட்டுமல்ல, வேகமாக நிதி சேர்ப்பிலும் இந்தியா சாதனை படைத்திருக்கிறது. இன்று உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இந்தியாவுக்கு சொந்தமாகியிருப்பது மட்டுமல்ல, உலகின் மிகப்பெரிய மருத்துவ உத்தரவாத திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம். இன்று உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின் பூங்காவை கட்டிவருவது மட்டுமின்றி, உலகின் மிகப்பெரும் சுகாதார திட்டத்தையும் இந்தியா செயல்படுத்தி வருகிறது.

இன்று 130 கோடி இந்தியர்கள் இணைந்து புதிய இந்தியாவை கட்டமைத்து வருகிறோம். எங்கள் இளைஞர் சக்தி முற்றிலும் ஆர்வத்தால் நிறைந்தது. மிகப்பெரிய இலக்குகளை நிர்ணயித்தல், அவற்றை அடைதல் போன்றவை இன்று புதிய இந்தியாவின் அடையாளமாக மாறி வருகிறது என்று பிரதமர் மோடி பேசினார்.

அவர் உரையாற்றி முடித்ததும் கூட்டத்தினர் அனைவரும் ‘இந்திய-அமெரிக்க நட்புறவு வாழ்க’ என வாழ்த்துக் களை முழங்கினர். இந்த வாழ்த்து கோஷங்களால் அந்த மைதானமே அதிர்ந்தது.