Home » தமிழகச் செய்திகள் » திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
Thiruvarur-At-Central-University-Student-commits-suicide-by

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை

திருவாரூர் அருகே உள்ள நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த முரளி என்பவரின் மகள் மைதிலி (வயது 19), ஒருங்கிணைந்த பி.எஸ்.சி. பி.எட். பட்டப்படிப்பில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருந்த அவர், நேற்று முன்தினம் இரவில் உணவு சாப்பிட வரவில்லை என தெரிகிறது.

இதையடுத்து சக மாணவிகள் மைதிலியின் அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது மைதிலி விடுதி அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கதறி அழுதபடி பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் நன்னிலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் பல்கலைக்கழகத்துக்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கிய மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மைதிலியின் தற்கொலை தொடர்பாக அவரது நண்பர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மைதிலி தற்கொலை செய்து கொண்டது குறித்து ஓசூரில் வசிக்கும் அவருடைய பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக திருவாரூர் வந்தனர்.

மைதிலியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.