பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » இந்தியா செய்திகள் » நிர்பயா கொலை குற்றவாளி கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு
Nirpaya-guilty-of-murderIn-the-Supreme-Court-on

நிர்பயா கொலை குற்றவாளி கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது32), பவன் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் தற்போது டெல்லி திகார் சிறையில் உள்ளனர்.

அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனு, மறுஆய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் அவர் களை தூக்கில் போடுவது 2 முறை தள்ளிப்போய் இருக்கிறது.

இதற்கிடையே குற்றவாளிகளில் ஒருவரான வினய் குமார் சர்மா, தன்னுடைய கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நேற்று நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூசண், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும் குற்றவாளி வினய் குமார் சர்மா தரப்பில் ஆஜரான வக்கீல் ஏ.பி.சிங் வாதாடுகையில், கருணை மனு தவறாக நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றவாளியின் மருத்துவ அறிக்கை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை ஜனாதிபதியின் பார்வைக்கு சிறைத்துறையும் உள்துறை அமைச்சகமும் அனுப்பவில்லை என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில் கூறியதாவது:இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் முழுமையாக ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்பப்பட்டன. வினய் குமார் சர்மா மருத்துவ ரீதியாக தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டார். சிறையில் உள்ள மனநல மருத்துவர் மற்றும் பிற மருத்துவர்கள் அவருக்கு மருத்துவ சோதனைகள் நடத்தி இருக்கிறார்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக சமீபத்திய மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. அனைத்து சட்ட ரீதியான வழிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டன. அனைத்து சோதனைகளும் நடத்தப்பட்டன. அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்டன. அவற்றை நன்றாக ஆராய்ந்த பிறகே, வினய் குமார் சர்மாவின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்து இருக்கிறார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வினய் குமார் சர்மாவின் மனு மீதான தீர்ப்பை இன்று (வெள்ளிக் கிழமை) பிற்பகல் 2 மணிக்கு வழங்குவதாக அறிவித்தனர்.

இதற்கிடையே, குற்றவாளிகளை தூக்கில் போடுவதற் கான புதிய மரண வாரண்டை பிறப்பிக்க கோரி, டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் திகார் சிறை நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று மீண்டும் கூடுதல் செசன்சு நீதிபதி தர்மேந்தர் ராணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் கோர்ட்டுக்கு சட்ட ரீதியான ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட வக்கீல் (‘அமிகஸ் கியூரி‘) விருந்தா குரோவர், வினய் குமார் சர்மா தரப்பில் வாதாட அஞ்சனா பிரகாஷ் என்ற வக்கீல் நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இலவச சட்ட ஆலோசனை மையத்தை சேர்ந்த வக்கீல் ரவி காஜி என்பவர், பவன் குப்தாவுக்காக தான் வாதாட முன்வந்து இருப்பதாக தெரிவித்தார்.

இதற்கு நிர்பயாவின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஜிதேந்திர ஜா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வாதாடுகையில், தூக்கிலிடுவதற்கான தேதியை கோர்ட்டு முடிவு செய்யவில்லை என்றால் குற்றவாளிகள் கோர்ட்டின் பொறுமையை சோதிக்கும் விளையாட்டில் ஈடுபடுவார்கள் என்றும், இந்த கோர்ட்டை ஏமாற்றுவதற்கு குற்றவாளிகள் எடுக்கும் முயற்சிகளை இந்த கோர்ட்டு உற்று நோக்க வேண்டும் என்று கூறினார்.

அதற்கு நீதிபதி, குற்றவாளிக்கு சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையை மறுக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், உணர்ச்சிகளின் அடிப்படையில் நாம் வழக்கை அணுக முடியாது என்றும், சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே வழக்கை அணுக முடியும் என்றும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி தர்மேந்தர் ராணா கூறுகையில், குற்றவாளி தனக்காக வக்கீலை நியமித்துக் கொள்ளவில்லை. தற்போது இலவச சட்ட ஆலோசனை மையம் நியமித்துள்ள வக்கீல் ரவி காஜிதான் ரிமாண்ட் வக்கீலாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார். எனவே குற்றவாளி பவன் குப்தாவுக்கு சட்டத்தின் அடிப்படையில் ஒரு வக்கீலை நியமிக்க வேண்டும் என்றார்.

அதற்கு நிர்பயாவின் பெற்றோர் தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி தர்மேந்தர் ராணா, வழக்கு விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.