Home » தமிழகச் செய்திகள் » சிறு கடனாளிகள், தொழில் நிறுவனங்கள் கடனை திரும்ப செலுத்த அவகாசம்: 12 முதல்-மந்திரிகளுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் மத்திய அரசை வலியுறுத்த கோரிக்கை
202106090436065281_Small-creditors-businesses-allowed-to-repay-loans-MK_SECVPF

சிறு கடனாளிகள், தொழில் நிறுவனங்கள் கடனை திரும்ப செலுத்த அவகாசம்: 12 முதல்-மந்திரிகளுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் மத்திய அரசை வலியுறுத்த கோரிக்கை

கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.தொழில்கள் முடங்கியதன் காரணமாக சிறுதொழில் நிறுவனங்கள், சிறுகடனாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு கடனாளிகள் தங்களின் கடனை திருப்பி செலுத்துவதற்கு அவகாசம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தக்கோரி 12 மாநில முதல்-மந்திரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திர பிரதேசம், பீகார், சத்தீஷ்கார், டெல்லி, ஜார்கண்ட், கேரளா, மராட்டியம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய 12 மாநில முதல்-மந்திரிகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அனைத்து முன்கள பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி வழங்குவதாக முன்பு மத்திய அரசு உறுதி அளித்திருந்ததை நீங்கள் அறிவீர்கள். ஆனால் அந்த கொள்கையில் இருந்து மத்திய அரசு விலகி, 18 வயதில் இருந்து 45 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி கொள்முதல் செய்து, வழங்கும் பொறுப்பை மாநில அரசு வசம் மத்திய அரசு மாற்றியது.

மத்திய அரசுதான் மிகப்பெரிய கொள்முதலை செய்ய முடியும் என்பதை நம்மில் பலரும் சுட்டிக்காட்டினோம். மேலும், மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கு மிகப்பெரிய நிதி ஆதாரம் இருப்பதால், பெரிய அளவில் தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து அதை இலவசமாக மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டுமென்று நம்மால் வலியுறுத்தப்பட்டது.

நமது ஒருங்கிணைந்த முயற்சி, மத்திய அரசை இசைய வைத்ததால், இந்த விஷயத்தில் முன்பிருந்த கொள்கையை நேற்று பிரதமர் மாற்றிக்கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

இதுமட்டுமல்லாமல், கடனாளர்களை, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சிறு கடனாளர்களை, கொரோனா பெருந்தொற்றின் முதலாவது மற்றும் 2-வது அலைகளின்போது, வெவ்வேறு தன்மைகளில் நடத்தும் பிரச்சினை தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் மீண்டும் ஒன்றிணைய வேண்டியது அவசியமாக உள்ளது.

2021 ஏப்ரல் முதல் ஜூன் வரையான மாதங்களில் உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில், அந்தந்த மாநில அரசுகளால் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், கொரோனா முதல் அலையின்போது கடனாளர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம் போன்ற நிவாரணம் தற்போது அளிக்கப்படவில்லை.

எனவே, கடன்களைத் திருப்பிச் செலுத்துவதைத் தள்ளிவைத்து, கூடுதல் காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்.

எனவே, ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, ரூ.5 கோடி வரையில் நிலுவைகளைக் கொண்டுள்ள அனைத்து சிறு கடனாளர்களுக்கும், குறைந்த அளவு 2021-2022 ஆண்டின் முதல் 2 காலாண்டுகளுக்கு, கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்ற கருத்தை மத்திய நிதி மந்திரி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஆகிய இருவரின் கவனத்திற்கும் கடிதம் மூலம் நீங்கள் அனைவரும் கொண்டு செல்ல வேண்டும்.

இதுபோன்ற நிவாரணம் கிடைக்காவிட்டால், பல தொழில்களை மூட வேண்டிய கட்டாயம் வந்துவிடும். இதன் மூலம் மிகப் பரவலான பொருளாதார சீரழிவு ஏற்படக்கூடும். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சிறு தொழில்கள்தான் நமது பொருளாதாரத்தின் பிரதான இடத்தை பிடிப்பதோடு, வேலை வாய்ப்பை அளிக்கும் அம்சமாகவும் இருக்கின்றன.

இதுபோன்ற கோரிக்கைகளை நாம் எடுத்துச் செல்வதை நீங்கள் நிச்சயமாக சரியானது என்று உணர்வீர்கள் என்று நம்புகிறேன். இக்காலக்கட்டத்தில் நமது கூட்டு வலிமையை நாம் மீண்டும் வெளிப்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*