பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » இந்தியா செய்திகள் » 6,700 பேர் தொடர்ந்து கண்காணிப்பு: இந்தியாவில் ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு
6700-people-continue-to-monitor-50-people-suffer

6,700 பேர் தொடர்ந்து கண்காணிப்பு: இந்தியாவில் ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் உயிர்ப்பலிகளை அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளையே ஆட்டம் காட்டி வரும் இந்த வைரஸ், இந்தியா போன்ற வளரும் நாடுகளையும் விட்டு வைக்கவில்லை.

இந்தியாவில் நேற்றுமுன்தினம் வரை 4 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகி இருந்தனர். இவர்கள் டெல்லி, கர்நாடகம், மராட்டியம் மற்றும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதைப்போல தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்பட நாடு முழுவதும் 193 பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருந்தனர்.

ஆனால் இந்த எண்ணிக்கை நேற்று 236 ஆக அதிகரித்து விட்டது. இதில் 32 பேர் வெளிநாட்டவர் ஆவர். நேற்று ஒரே நாளில் மட்டும் 50 பேர் புதிதாக கொரோனா வைரசின் பிடியில் சிக்கிக்கொண்டனர். மேலும் 6,700-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற இத்தாலி முதியவர் ஒருவர் உயிரிழந்தார். ஆனால் அவர் இந்திய பலி எண்ணிக்கையில் கணக்கிடப்படமாட்டார் என மத்திய அரசு கூறியுள்ளது. இதனால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 4 என்றே கணக்கிடப்படும் என சுகாதார அமைச்சக இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனாவை தடுக்க பிரதான வழி சமூக விலகியிருத்தலே ஆகும். அந்தவகையில் பிரதமர் மோடி மக்கள் ஊரடங்குக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஒருநாள் ஒத்துழைப்பு, வைரஸ் பரவல் சங்கிலியை உடைக்க உதவும். கொரோனா குறித்த சந்தேகங்களை மக்கள் 1075 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்’ என்று தெரிவித்தார்.

இவ்வாறு வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன. டெல்லியில் தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும் இந்த மாதம் இறுதிவரை வீட்டில் இருந்து பணியாற்ற அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் மக்கள் அனைவரும் குறிப்பாக மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், நீரிழிவு நோயாளிகள் போன்றவர்கள் வீட்டிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

கொரோனா வைரசால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்த அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள் சிலர் நேற்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினர். இதில் இந்த துறைக்கு நிதி உதவி, கடன் வசூலை தள்ளி வைத்தல் போன்றவை குறித்து ஆலோசித்ததாக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரெயில்களில் முன்பதிவு குறைந்துள்ளன. எனவே மேலும் 90 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இவற்றையும் சேர்த்து மொத்தம் 245 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக ரெயில்வே துறை அறிவித்து உள்ளது.

அரசு ஆய்வுக்கூடங்களில் மட்டுமே கொரோனா வைரஸ் பரிசோதிக்கப்பட்டு வரும் நிலையில், 14 தனியார் நிறுவனங்களும் இந்த வைரஸ் தொற்றை பரிசோதிப்பதற் கான உரிமங்களை பெற்றுள்ளன. இதில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோச் பரிசோதனை நிறுவனமும் அடங்கும்.