பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » விளையாட்டுச்செய்திகள் » ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் விளையாடுவதற்காக பேட்டிங் வரிசையில் பின்னால் இறங்க தயார் – கேப்டன் விராட்கோலி
Virat-Kohli-says-hes-willing-to-change-batting-position-to

ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் விளையாடுவதற்காக பேட்டிங் வரிசையில் பின்னால் இறங்க தயார் – கேப்டன் விராட்கோலி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி மும்பையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வீரர்கள் பார்மில் இருப்பது அணிக்கு எப்பொழுதும் நல்லதாகும். சிறந்த வீரர்கள் இருந்தால் தான் அணியின் கலவையை சிறப்பானதாக அமைக்க முடியும். ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் ஆகிய மூன்று தொடக்க வீரர்களும் முதலாவது போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளது. அவர்கள் மூவரும் களம் இறங்குகையில் நான் பேட்டிங் வரிசையில் பின்னால் தான் களம் இறங்க முடியும். பின்வரிசையில் மகிழ்ச்சியுடன் களம் இறங்க நான் தயாராக இருக்கிறேன். குறிப்பிட்ட வரிசையில் தான் களம் இறங்குவேன் என்று சொல்லமாட்டேன். வேறு வரிசையில் களம் இறங்கினால் பாதுகாப்பாக இருக்காது என்று கருதவில்லை.

அணியின் கேப்டனாக அடுத்து நிறைய வீரர்கள் தயாராக இருக்கிறார்களா? என்பதை உறுதி செய்வதும் எனது பணியாகும். கேப்டனின் வேலை தற்போதைய அணியை நிர்வகிப்பது மட்டும் கிடையாது. எதிர்கால அணியை தயார்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். அடுத்து வரும் நபரிடம் அணியை ஒப்படைக்கும் போது சிறந்த அணியை விட்டுச் செல்லும் வகையில் பார்த்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும். கேப்டன் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும் என்பதை அறிந்து இருக்கிறேன். தனிப்பட்ட ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தக்கூடாது. அப்படிப்பட்ட அணுகுமுறை வேலைக்கு உதவாது. சக வீரர்கள் நம்பிக்கையை வளர்த்து கொள்ள உதவ வேண்டும். மற்ற வீரர்களுக்கும் வாய்ப்புகள் அளிக்க வேண்டும்.

கடந்த ஆண்டு நமக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணியை விட தற்போதைய அணி வலுவானதாகும். ஆனால் அந்த தொடருக்கு முன்பு அவர்கள் முழு பலத்துடன் இருந்த போது நாம் அவர்களுக்கு எதிரான தொடரை வென்று இருக்கிறோம். அதிக அனுபவமும், திறமையும் கொண்ட வீரர்கள் உங்கள் அணியில் இருந்தாலும் ஒரு அணியாக நீங்கள் சிறப்பாக செயல்படாவிட்டால் வெற்றி பெற முடியாது. அது தான் கடந்த ஆண்டு நமக்கு நடந்தது. கடந்த முறை நாம் ஆஸ்திரேலிய சென்று விளையாடிய போது அவர்களுக்கு நடந்தது என்ன?. (கடந்த ஆண்டு ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது).

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான போட்டி தொடர் எப்பொழுதும் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும். எந்த அணியும் ஆதிக்கம் செலுத்த முடியாது. வெற்றி வித்தியாசம் பெரிய அளவில் இருக்காது. ஆஸ்திரேலிய அணியை நமது சொந்த மண்ணில் சந்தித்தாலும், ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதன் மூலம் ஆஸ்திரேலிய வீரர்கள் நமது சூழலை நன்கு அறிந்து வைத்துள்ளனர். ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் களம் திரும்பிய பிறகு ஆஸ்திரேலிய அணி எல்லா அணிகளுக்கும் கடும் சவால் அளித்து வருகிறது. சில அணிகளுக்கு எதிராக ஆதிக்கமும் செலுத்தியது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் எல்லா துறைகளிலும் சமமான பலத்துடன் உள்ளதாக நினைக்கிறேன். சிறந்த அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடி எங்களை திறமையை பரிசோதிக்க ஆர்வமாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.