Home » கன்னியாகுமரி செய்திகள் » வாக்காளர்களுக்கு வழங்க மூடை, மூடையாக பதுக்கி வைத்த மதுபாட்டில்கள் பறிமுதல்
202104070157025441_Seizure-of-liquor-bottles_SECVPF

வாக்காளர்களுக்கு வழங்க மூடை, மூடையாக பதுக்கி வைத்த மதுபாட்டில்கள் பறிமுதல்

நித்திரவிளை அருகே வாக்காளர்களுக்கு வழங்க மூடை, மூடையாக பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

 

தமிழத்தில் நேற்று சட்டசபை தேர்தல் நடைபெற்றது. குமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிக்கும், காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடந்தது.
தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகிப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் வாக்காளர்களுக்கு மதுபாட்டில் வழங்க அரசியல் கட்சியினர் திட்டமிட்டிருப்பதாக புகார் வந்தது. எனவே போலீசாரும் தீவிரமாக ரோந்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மீனவ கிராமமான பூத்துறை அருகே காருண்யபுரம் பகுதியில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக மது பாட்டில்கள் வாகனத்தில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.உடனே இன்ஸ்பெக்டர் பட்டாணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அந்த வாகனத்தை போலீசார் நெருங்கினர். இதனை கவனித்த 2 மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
பின்னர் போலீசாரின் சோதனையில், வாகனத்தின் மேல் பகுதியில் பெட்டியில் ஐஸ்களை நிரப்பி வைத்து விட்டு அடியில் சாக்குமூடைகளில் 1,556 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து போலீசார், வாகனத்தையும், மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து நித்திரவிளை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதுபற்றி மாவட்ட  போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டு துரிதமாக செயல்பட்ட போலீசாரை பாராட்டினார்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் வாகன உரிமையாளர் அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த லீனஸ் விக்டர் என்பதும், டிரைவர் ஆரோக்கியபுரம் கல்லுவிளையை சேர்ந்த செல்வம் (வயது 35) என்பதும் தெரிய வந்தது.  மேலும், ஓட்டுப்போட வரும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக மது பாட்டில்களை பதுக்கி கொண்டு வந்தது தெரியவந்தது. பின்னர் தப்பியோடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.