Home » கன்னியாகுமரி செய்திகள் » நாகர்கோவில் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ரவுடியை தீர்த்து கட்டியது அம்பலம்
202201130133332832_Rowdy-murdered-in-fake-love-affair_SECVPF

நாகர்கோவில் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ரவுடியை தீர்த்து கட்டியது அம்பலம்

நாகர்கோவில் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பிரபல ரவுடியை தீர்த்து கட்டியது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக 4 பேைர போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நாகர்கோவில் அருகே உள்ள குஞ்சன்விளை வைகுண்டர் வீதியை சேர்ந்தவர் சுந்தர மகாலிங்கம். இவர் வனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் தங்க கிருஷ்ணன் (வயது43), டிரைவர். இவர் மீது கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இருந்து வந்தார். தங்க கிருஷ்ணனுக்கு மனைவியும் ,2 குழந்தைகளும் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு தங்ககிருஷ்ணன் குஞ்சன்விளையில் 5 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
இதில் பல திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு:-
தங்க கிருஷ்ணனும் அதே பகுதியை சேர்ந்த பிரபு என்பவரும் நண்பர்கள். பிரபு வக்கீலாக உள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம்.
இந்த நிலையில் பிரபுவுக்கும் தங்க கிருஷ்ணனின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்ததும் தங்க கிருஷ்ணன், பிரபுவிடம் தகராறு செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் அடிக்கடி போனில் பேசும்போது ஆவேசமாக பேசி வந்தனர். அப்போது பிரபு, தங்ககிருஷ்ணனிடம், ‘நீ தான் மனைவியை பிரிந்து     சென்று விட்டா யே. பிறகு ஏன் தகராறு செய்கிறாய்’    என்று கேட்டுள் ளார். இதுதொடர்பாக இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் கொலை செய்துவிடுவதாக மிரட்டி வந்துள்ளனர்.
இந்த நிலையில் தங்க கிருஷ்ணன் சேலத்துக்கு சென்றுவிட்டார். அங்கு டிரைவராக பணியாற்றினார். அவ்வப்போது ஊருக்கு வருவது வழக்கம். தங்ககிருஷ்ணன் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார்.
இந்த தகவல் பிரபுவுக்கு தெரியவந்தது. ஏற்கனவே தன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய தங்ககிருஷ்ணனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். இதற்காக தனக்கு தெரிந்த ரவுடி கும்பலை தொடர்பு கொண்டு, தங்க கிருஷ்ணனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு தங்க கிருஷ்ணனிடம் சமாதானம் பேச வருமாறு பிரபு அழைத்துள்ளார். அதன்படி தங்க கிருஷ்ணன் தனது சகோதரர் சுதனுடன் வந்தார். பின்னர் 3 பேரும் குஞ்சன்விளையில் உள்ள பிரபுவுக்கு சொந்தமான இடத்தில் மது அருந்தியுள்ளனர்.
அப்போது திடீரென வந்த கும்பல் தங்க கிருஷ்ணனை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் தப்பி ஓட முயன்ற அவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொன்றனர்.
இதை பார்த்ததும் அவரது தம்பி சுதன் கூச்சலிட்டவாறு தப்பி ஓடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அதற்குள் அந்த கும்பல் தப்பி சென்றது.மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதற்கிடையே தங்க கிருஷ்ணனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து தங்ககிருஷ்ணனின் தந்தை சுந்தர மகாலிங்கம் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் கோட்டார் கலைநகர் பகுதியை சேர்ந்த சுதன் என்ற நண்டு சுதன், குஞ்சன்விளையை சேர்ந்த மகேஷ் ராஜன் மற்றும் வக்கீல் பிரபு, மறவன்குடியிருப்பை சேர்ந்த ஜெகதீஷ் மற்றும் கண்டால் அடையாளம் தெரியும் ஒரு நபர் உள்பட 5 பேர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இது தொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். இதில் சுதன் என்ற நண்டு சுதன் ஏற்கனவே ரவுடி பட்டியலில் உள்ளார்.
 இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொலையில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தேடி வந்தவர்களில் 4 பேர் சிக்கினர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.  குஞ்சன்விளை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் தங்க கிருஷ்ணனின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குஞ்சன்விளையில் உள்ள ஊர் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.