Home » விளையாட்டுச்செய்திகள் » வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ரோகித் சர்மா 85 ரன்கள் விளாசி அசத்தல் 2-வது ஆட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி
2nd-20th-over-cricket-against-Bangladesh-Indian-team-wins

வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ரோகித் சர்மா 85 ரன்கள் விளாசி அசத்தல் 2-வது ஆட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி

ராஜ்கோட்,

இந்தியா – வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்றிரவு அரங்கேறியது. முந்தைய நாள் பலத்த மழை பெய்த நிலையில் அதிர்ஷ்டவசமாக நேற்றைய ஆட்டம் மழை குறுக்கீடு இன்றி தப்பியது. இரு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் வங்காளதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதன்படி லிட்டான் தாசும், முகமது நைமும் வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர்.

இது பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் வங்காளதேச வீரர்கள் ஆரம்பத்திலேயே அதிரடி காட்டும் முனைப்புடன் செயல்பட்டனர். கலீல் அகமதுவின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விரட்டிய முகமது நைம், அவரது இன்னொரு ஓவரில் 2 பவுண்டரி சாத்தினார். இதனால் வங்காளதேச அணியின் ஸ்கோர் வேகமாக நகர்ந்தது. ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் எடுத்திருந்தது.

சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் வந்ததும் வங்காளதேச அணியின் ரன்வேகம் சற்று தளர்ந்தது. ஸ்கோர் 60 ரன்களை எட்டிய போது லிட்டான் தாஸ் (29 ரன், 21 பந்து, 4 பவுண்டரி) ரன்-அவுட் செய்யப்பட்டார். முகமது நைம் (36 ரன், 31 பந்து, 5 பவுண்டரி) வாஷிங்டன் சுந்தரின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

இதன் பின்னர் யுஸ்வேந்திர சாஹலின் சுழலில் சிக்கி முந்தைய ஆட்டத்தின் ஹீரோ முஷ்பிகுர் ரஹிம் (4 ரன்), சவுமியா சர்கார் (30 ரன், 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஒரே ஓவரில் வீழ்ந்தனர். ஒரு கட்டத்தில் 180 ரன்களை நெருங்கும் போல் சென்ற வங்காளதேசத்தின் ஸ்கோர் சுழற்பந்து வீச்சாளர்கள் தந்த நெருக்கடியால் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது. மிடில் வரிசையில் கேப்டன் மக்முதுல்லா மட்டும் கணிசமான பங்களிப்பு (30 ரன், 21 பந்து, 4 பவுண்டரி) அளித்தார்.

20 ஓவர் முடிவில் வங்காளதேச அணி 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். கலீல் அகமது ஒரு விக்கெட் எடுத்தாலும் 4 ஓவர்களில் 44 ரன்களை வாரி வழங்கி வள்ளலாக மாறிப்போனார்.
ரோகித் சர்மா சிக்சர் மழை

அடுத்து 154 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. தொடக்க வீரர்களான ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் சிறப்பான அஸ்திவாரம் அமைத்து கொடுத்து வெற்றிப்பாதையை சுலபமாக்கினர். ரோகித் சர்மா அதிரடியில் ரசிகர்களை குஷிப்படுத்தினார். முஸ்தாபிஜூர் ரகுமானின் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் நொறுக்கிய ரோகித் சர்மா, மொசாடெக் ஹூசைனின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர்களை பறக்க விட்டு பிரமாதப்படுத்தினார். மறுபுறம் தவான் நிதானமாக ஆடினார்.

அணியின் ஸ்கோர் 118 ரன்களை எட்டிய போது, தவான் 31 ரன்களில் (27 பந்து, 4 பவுண்டரி) போல்டு ஆனார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 85 ரன்களில் (43 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) கேட்ச் ஆனார்.

இந்திய அணி 15.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, முந்தைய தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டது. ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது. முதலாவது ஆட்டத்தில் வங்காளதேசம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாக்பூரில் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

ஸ்கோர் போர்டு – வங்காளதேசம்

லிட்டான்தாஸ் (ரன்-அவுட்) 29

முகமது நைம் (சி) ஸ்ரேயாஸ்

அய்யர் (பி) வாஷிங்டன் 36

சவுமியா சர்கார் (ஸ்டம்பிங்)

பண்ட் (பி) சாஹல் 30

முஷ்பிகுர் ரஹிம்(சி)குருணல்

பாண்ட்யா (பி) சாஹல் 4

மக்முதுல்லா (சி) துபே

(பி) சாஹர் 30

அபிப் ஹூசைன் (சி)

ரோகித் (பி) கலீல் அகமது 6

மொசாடெக் ஹூசைன்

(நாட்-அவுட்) 7

அமினுல் இஸ்லாம்(நாட்-அவுட்) 5

எக்ஸ்டிரா 6

மொத்தம் (20 ஓவர்களில்

6 விக்கெட்டுக்கு) 153

விக்கெட் வீழ்ச்சி: 1-60, 2-83, 3-97, 4-103, 5-128, 6-142

பந்து வீச்சு விவரம்

தீபக் சாஹர் 4-0-25-1

கலீல் அகமது 4-0-44-1

வாஷிங்டன் சுந்தர் 4-0-25-1

யுஸ்வேந்திர சாஹல் 4-0-28-2

ஷிவம் துபே 2-0-12-0

குருணல் பாண்ட்யா 2-0-17-0

இந்தியா

ரோகித் சர்மா (சி)

சப் (முகமது மிதுன்) (பி)

அமினுல் இஸ்லாம் 85

ஷிகர் தவான் (பி)

அமினுல் இஸ்லாம் 31

லோகேஷ் ராகுல்(நாட்-அவுட்) 8

ஸ்ரேயாஸ்அய்யர்(நாட்-அவுட்) 24

எக்ஸ்டிரா 6

மொத்தம் (15.4 ஓவர்களில்

2 விக்கெட்டுக்கு) 154

விக்கெட் வீழ்ச்சி: 1-118, 2-125

பந்து வீச்சு விவரம்

முஸ்தாபிஜூர் ரகுமான் 3.4-0-35-0

ஷபியுல் இஸ்லாம் 2-0-23-0

அல்-அமின் ஹூசைன் 4-0-32-0

அமினுல் இஸ்லாம் 4-0-29-2

அபிப் ஹூசைன் 1-0-13-0

மொசாடெக் ஹூசைன் 1-0-21-0

இந்த ஆட்டத்தில் இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் வித்தியாசமான ஒரு தவறை செய்தார். ஆட்டத்தின் 6-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் வீசினார். அவரது பந்து வீச்சில் லிட்டான் தாஸ் (17 ரன்னில் இருந்த போது) கிரீசை விட்டு சில அடி இறங்கி வந்து விளாச முயற்சித்து ஏமாந்து போனார். பந்து நேராக விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டுவிடம் சென்றது. துரிதமாக ஸ்டம்பிங் செய்யும் நோக்கத்தில் அவசரப்பட்ட ரிஷாப் பண்ட் பந்து ஸ்டம்பை கடந்து வரும் முன்பே பிடித்து ஸ்டம்பிங் செய்து விட்டார். டி.வி. ‘ரீப்ளே’யில் அவரது கையுறை ஸ்டம்புக்கு சற்று முன்பாக நீள்வது தெரிந்தது. விதிமுறைப்படி விக்கெட் கீப்பர் பந்து ஸ்டம்பை கடந்த பிறகு தான் பிடித்து ஸ்டம்பிங் செய்ய வேண்டும். இதனால் இது நோ-பாலாக அறிவிக்கப்பட்டதுடன் பிரீஹிட்டும் வழங்கப்பட்டது. பிரீஹிட்டில் லிட்டான் தாஸ் பவுண்டரி அடித்தார்.

இதற்கு அடுத்த ஓவரில் லிட்டான் தாஸ் வழங்கிய எளிதான கேட்ச் வாய்ப்பை கேப்டன் ரோகித் சர்மா கோட்டைவிட்டு ரசிகர்களை மேலும் நோகடித்தார். ஆனாலும் லிட்டான் தாஸ் அதிக நேரம் நீடிக்கவில்லை. தனது தவறுக்கு பரிகாரம் தேடிக்கொண்ட ரிஷாப் பண்ட் அவரை ரன்-அவுட்டில் காலி செய்தார். சவுமியா சர்காரும் இதே போல் கிரீசை விட்டு இறங்கி பந்தை அடிக்க முயற்சித்த போது, சுதாரித்துக் கொண்ட ரிஷாப் பண்ட் பொறுமையாக அவரை ஸ்டம்பிங் முறையில் வீழ்த்தினார்.

இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மாவின் 100-வது சர்வதேச 20 ஓவர் போட்டி இதுவாகும். இந்த மைல்கல்லை எட்டிய 2-வது வீரர் ரோகித் சர்மா ஆவார். முதலிடத்தில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் மாலிக் (111 ஆட்டம்) உள்ளார்.