பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » விளையாட்டுச்செய்திகள் » மும்பைக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி தடுமாற்றம்
Ranji-cricket-against-Mumbai-Tamil-Nadu-team-stumbles

மும்பைக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி தடுமாற்றம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. தமிழ்நாடு-மும்பை அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) சென்னை சேப்பாக்கத் தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி முதல் இன்னிங்சில் 488 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆதித்ய தாரே 154 ரன்கள் சேர்த்தார். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 31 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்து இருந்தது. அபினவ் முகுந்த் 52 ரன்னுடனும், சூர்யபிரகாஷ் 11 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அபினவ் முகுந்த் (58 ரன்கள்) தேஷ்பாண்டே பந்து வீச்சில் ஜெய் பிஸ்தாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சூர்யபிரகாஷ் 41 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து பாபா அபராஜித் 14 ரன்னில் அவுட் ஆனார்.

நிலைத்து நின்று ஆடிய கவுசிக் காந்தி 60 ரன்கள் எடுத்த நிலையில் ஷம்ஸ் முலானி பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஆதித்ய தாரேவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து பிரதோஷ் ரஞ்சன் பால் (0), பாபா இந்திராஜித் (6 ரன்), தினேஷ் கார்த்திக் (7 ரன்) விரைவில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 121 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்து தடுமாறியது. ஆர்.அஸ்வின் 32 ரன்னுடனும், சாய் கிஷோர் 17 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். மும்பை அணி தரப்பில் ஷம்ஸ் முலானி, தேஷ்பாண்டே, ரோஸ்டன் டியாஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள். இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இந்த போட்டி டிராவில் முடிய அதிக வாய்ப்புள்ளது.

ராஜ்கோட்டில் நடக்கும் கர்நாடகாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 581 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா 248 ரன்னும், ஷெல்டன் ஜாக்சன் 161 ரன்னும் எடுத்தனர். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய கர்நாடக அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் எடுத்து இருந்தது. 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 171 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆகி ‘பாலோ-ஆன்’ ஆனது. சவுராஷ்டிரா அணி தரப்பில் ஜெய்தேவ் உனட்கட் 5 விக்கெட்டும், கம்லேஷ் மக்வானா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய கர்நாடக அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்தது.

புதுச்சேரியில் நடைபெறும் கோவா-புதுச்சேரி அணிகள் இடையிலான ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் கோவா அணி 270 ரன்னும், புதுச்சேரி அணி 260 ரன்னும் எடுத்தன. 10 ரன்கள் முன்னிலையுடன் 3-வது நாளான நேற்று 2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடிய கோவா அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது.

தும்பாவில் நடந்த கேரள அணிக்கு எதிரான ஆட்டத்தில் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய பஞ்சாப் அணி 46.1 ஓவர்களில் 124 ரன்னில் சுருண்டது.

இதனால் கேரளா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேரள அணி வீரர் ஜலஜ் சக்சேனா 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.