Home » கன்னியாகுமரி செய்திகள் » பொங்கல் விடுமுறை: குமரி சுற்றுலாதலங்களில் அலைமோதும் கூட்டம்
download 5

பொங்கல் விடுமுறை: குமரி சுற்றுலாதலங்களில் அலைமோதும் கூட்டம்

பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாக குமரி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் குடும்பத்தோடு சுற்றுலாத் தலங்களை நோக்கி படையெடுக்கின்றனா்.

குளுகுளு சீசன்:கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது மிதமான வெயிலுடன் இதமான கால நிலை நிலவுகிறது. குறிப்பாக நீா்நிலை சாா்ந்த சுற்றுலாத் தலங்களான கடற்கரைகள் மற்றும் திற்பரப்பு அருவி உள்ளிட்ட இடங்கள் ரம்மியமாக உள்ளன.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கன்னியாகுமரி, பத்மநாபபுரம் அரண்மனை, சொத்தவிளை, முட்டம், திற்பரப்பு அருவி, மாத்தூா் தொட்டிப்பாலம், பேச்சிப்பாறை அணை என இம்மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை நோக்கி சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனா். இதனால் இப்பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

மேலும், ஆன்மிகச் சுற்றுலாவை விரும்பும் மக்கள் சுசீந்திரம், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில், சிதறால் மலைக் கோயில் ஆகிய பகுதிகளுக்கு வந்த வண்ணம் உள்ளனா்.

மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகள் சீரமைக்கப்படாமல் கிடப்பதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இச்சாலைகளில் அதிகளவில் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.