Home » இந்தியா செய்திகள் » 106 நாட்கள் சிறைவாசம் முடிந்தபின் முதல் பேட்டிமத்திய அரசு மீது ப.சிதம்பரம் பாய்ச்சல்“மந்த நிலையில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திறன் இல்லை”
First-interview-after-106-days-in-prisonP-Chidambaram

106 நாட்கள் சிறைவாசம் முடிந்தபின் முதல் பேட்டிமத்திய அரசு மீது ப.சிதம்பரம் பாய்ச்சல்“மந்த நிலையில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திறன் இல்லை”

106 நாட்கள் சிறைவாசம் முடிந்த நிலையில் முதல்முறையாக பேட்டி அளித்த ப.சிதம்பரம், “மந்த நிலையில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திறன் மத்திய அரசுக்கு இல்லை” என சாடினார்.

போராட்டத்தில் பங்கேற்றார் ப.சிதம்பரம்
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு விவகாரத்தில், அமலாக்கப்பிரிவு தொடர்ந்துள்ள வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

அதைத் தொடர்ந்து, 106 நாட்கள் சிறைவாசத்தை முடித்துக்கொண்டு அவர் டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். நேற்று அவர் நாடாளுமன்றத்துக்கு வந்தார். நாடாளுமன்ற வளாகத்தில், வரலாறு காணாத வகையில் புதிய உச்சங்களை தொட்டு வரும் வெங்காய விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, அமர்சிங் உள்ளிட்டவர்களுடன் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் பேசுகையில், “நாடாளுமன்றத்தில் எனது குரலை ஒடுக்க அரசால் முடியாது” என கூறினார்.மாநிலங்களவையில் பங்கேற்பு மாநிலங்களவை நிகழ்ச்சிகளில் ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் தீரக் ஓ பிரையன் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.

அவை அலுவல் குறிப்பினை மாநிலங்களவை ஊழியரிடம் கேட்டுப்பெற்ற ப.சிதம்பரம், சபை நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தார். பூஜ்ய நேரத்தில் பட்டியலிடப்படாத பிரச்சினைகளை எழுப்ப அனுமதி அளிக்க மறுத்து, சபை நண்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டது வரை அவர் சபையில் இருந்தார்.

106 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் ப.சிதம்பரம் முதன்முதலாக காங்கிரஸ் தலைமையகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “ கடந்த 106 நாட்களில் நான் மனதாலும், உடலாலும் வலுவாக இருந்தேன். சிறையில் மர கட்டிலில் படுத்து உறங்கிய பின்னர் எனது கழுத்து, முதுகெலும்பு, தலை எல்லாமே வலுவாக இருக்கின்றன. சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதில் மகிழ்ச்சி. 106 நாட்களுக்கு பின்னர் சுதந்திர காற்றை சுவாசிப்பதில் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டார். அத்துடன், “மந்திரியாகவும், மனசாட்சிப்படியும் நான் அப்பழுக்கின்றி நடந்து கொண்டு இருக்கிறேன்”எனவும் கூறினார்.

அவர், நாட்டின் பொருளாதார நிலையை விவரித்தார். அப்போது அவர், “8, 7, 6.6, 5.8, 5, 4.5 என எண்களின் வரிசையை விட பொருளாதாரத்தின் நிலையை சுருக்கமாக சிறப்பாக கூறி விட முடியாது” என குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 காலாண்டுகளில், ஒவ்வொரு காலாண்டிலும் குறைந்து வந்துள்ளதை இப்படி அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார நிலை குறித்து அவர் குறிப்பிடும்போது, “ நோயை கண்டறிவது தவறாக இருந்தால், அதற்கான மருந்தும் பயனற்றதாகவே இருக்கும்” என சாடினார்.பேரழிவு தவறுகள்

தொடர்ந்து அவர் கூறும்போது, “இந்த நிதி ஆண்டில் 7 மாதங்கள் கடந்து சென்ற பிறகும்கூட, பொருளாதாரம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சுழற்சியானவை என பாரதீய ஜனதா அரசு நம்புகிறது. இந்த அரசு தவறாக செயல்படுகிறது. அதற்கு காரணம், என்ன செய்கிறோம், எங்கு போகிறோம் என்பது அவர்களுக்கு தெரியாததுதான்” என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை, குறைபாடுகளை கொண்ட சரக்கு, சேவை வரிவிதிப்பு, வரி பயங்கரவாதம், அதிகப்படியான ஒழுங்குமுறைகள், முடிவு எடுப்பதில் பிரதமர் அலுவலகத்தின் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு போன்ற அதன் பேரழிவு தவறுகளை பாதுகாப்பதில் பிடிவாதமாக இருப்பதால் வெளிப்படையான காரணங்களை மத்திய அரசால் கண்டறிய முடியவில்லை” என்று சாடினார்.மேலும், “ மோடி, பொருளாதாரத்தில் வழக்கத்துக்கு மாறான அமைதியுடன் உள்ளார்” என்றும் குறை கூறினார்.

“பொருளாதார மந்த நிலை கட்டமைப்பு ரீதியிலானது, கட்டமைப்பு ரீதியிலான பிரச்சினைகளுக்கு அரசிடம் தீர்வும் இல்லை, சீர்திருத்தமும் இல்லை” என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டார்.

முடிவாக அவர் குறிப்பிடும்போது, “ மந்த நிலையில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும். ஆனால் அதற்கான திறன் மத்திய அரசுக்கு இல்லை” என அவர் கூறினார்.