பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » விளையாட்டுச்செய்திகள் » ஆரவாரமின்றி ஜப்பான் சென்றது ஒலிம்பிக் தீபம்: 26-ந்தேதி முதல் தொடர் ஓட்டம்
Japan-Olympic-torch-passed-quietly-First-series-run-on-26th

ஆரவாரமின்றி ஜப்பான் சென்றது ஒலிம்பிக் தீபம்: 26-ந்தேதி முதல் தொடர் ஓட்டம்

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. கொரோனா என்ற கொடிய வைரசின் பாதிப்பு உலகம் முழுவதும் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதால் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா? என்று ஒரு பக்கம் சந்தேகம் நிலவினாலும், அதற்கான ஏற்பாடுகளை ஜப்பான் அரசாங்கமும், ஒலிம்பிக் கமிட்டியினரும் ஜரூராக செய்து வருகின்றனர்.

ஒலிம்பிக் போட்டிக்கான தீபம் ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் பாரம்பரிய முறைப்படி ஏற்றப்பட்டது. பின்னர் தீபம் ஜப்பான் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபத்துடன் ‘டோக்கியோ 2020’ என்ற பெயரிலான சிறப்பு விமானம் ஏதென்சில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டது. அந்த விமானம் ஜப்பானின் ஹிகாஷிமாட்சுஷிமாவில் உள்ள விமான படை தளத்துக்கு நேற்று சென்றடைந்தது.

வழக்கமாக ஒலிம்பிக் தீபம் கொண்டு வரப்படும் போது அதை வரவேற்கும் விதமாக கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்படுவது உண்டு. கொரோனா பீதியால் அத்தகைய நிகழ்ச்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. இதனால் ஆரவாரமும், காதை பிளக்கும் கரவொலி கோஷமும் இன்றி தீபம் ஜப்பானுக்குள் நுழைந்தது. அதை டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி தலைவர் யோஷிரோ மோரி பெற்றுக் கொண்டார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த கொப்பரையில் ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன்கள் சாவ்ரி யோஷிடா, தடாஹிரோ நோமுரா ஆகியோர் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தனர். அப்போது வானில் விமானப்படை விமானங்கள் ஒலிம்பிக் 5 வளையங்களின் நிறத்தை குறிக்கும் வகையில் வண்ண புகையை கக்கிக்கொண்டு சீறிச் சென்றன.

முக கவசங்களுடன் சிறிய அளவில் கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய யோஷிரோ மோரி, ‘ஒலிம்பிக் தீபத்தை வரவேற்க இங்கு 200 மாணவ, மாணவிகளை நிறுத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் பாதுகாப்பு கருதி அந்த யோசனையை விட்டு விட்டோம். பாதுகாப்பான ஒலிம்பிக் அதுவே எங்களது நோக்கம். ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் மிகப்பெரிய நிகழ்ச்சி. எந்த விலை கொடுத்தாவது அதை நடத்த வேண்டியது முக்கியம்’ என்றார்.

வருகிற 26-ந்தேதி முதல் ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் முழுவதும் தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்படுகிறது. 2011-ம் ஆண்டு பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு ஜப்பானில் உள்ள புகுஷிமாவில் இருந்து ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் தொடங்குகிறது. கொரோனா பரவலை தடுக்க ஒவ்வொரு நகரங்களுக்கும் ஜோதி வந்தடையும் போதும், அங்கிருந்து கிளம்பும் போதும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஜோதியுடன் ஓடும் பிரபலங்களை பார்க்க சாலையோரம் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.