பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » கன்னியாகுமரி செய்திகள் » குடியிருப்பு பகுதியில் புலி நடமாட்டமா? வனத்துறையினர் கால் தடங்களை சேகரித்து விசாரணை
download

குடியிருப்பு பகுதியில் புலி நடமாட்டமா? வனத்துறையினர் கால் தடங்களை சேகரித்து விசாரணை

நாகர்கோவிலை அடுத்த புத்தேரி குளத்தின் கரையின் அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் மர்ம விலங்கு ஒன்று நடமாடியதாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த சிலர், அலறியடித்து ஓடியுள்ளனர். அந்த விலங்கு புலி போன்ற தோற்றத்தில் இருந்ததால் அவர்கள் பயந்து ஓடியதாக கூறப்படுகிறது. மேலும் இதுபற்றிய குடியிருப்பு மக்கள் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புலிநடமாட்டம் பீதி ஏற்பட்டது.
எனவே அப்பகுதி மக்கள் வீடுகளை பூட்டிக் கொண்டு, சிறுவர்களை வெளியில் நடமாட விடாமல் இருந்தனர்.

இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரி பிரசன்னா தலைமையில் நேற்று அப்பகுதிக்கு சென்றனர்.

அப்போது அப்பகுதி மக்கள் மர்ம விலங்கால் தங்களுக்கும், தங்களது பிள்ளைகள் மற்றும் கால்நடைகளுக்கும் ஆபத்து ஏற்படும். எனவே உடனடியாக அந்த விலங்கை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

பின்னர் புலியை பார்த்ததாக கூறியவர்களிடம் வனத்துறை அதிகாரி விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து அங்கு பதிவாகியிருந்த மர்ம விலங்கின் கால்தடங்களை ஆய்வு செய்தனர். பின்னர் அந்த கால்தடங்களை சேகரித்து நாகர்கோவில் வடசேரியில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனர்.

மர்ம விலங்கு புலிதானா? என்பது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி ஆனந்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:நாகர்கோவில் புத்தேரி பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, நேரில் பார்த்ததாக கூறியவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பதிவாகி இருந்த விலங்கின் கால்தடங்களையும் ஆய்வு செய்தனர். இதில் அங்கு பதிவாகியிருக்கும் விலங்கின் கால்தடம் புலியின் கால்தடம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு புலி நடமாட்டம் எதுவும் இல்லை. புலி மற்றும் புலிக்குட்டியின் கால்தடம் பெரியதாக இருக்கும்.

ஆனால் புத்தேரி பகுதியில் பதிவாகி உள்ள விலங்கின் கால்தடம் காட்டுப்பூனையின் கால்தடம் ஆகும். இது பூனையைவிட சற்று பெரியதாக இருக்கும். இதைப்பார்த்துதான் புலி என்று கூறியிருக்கிறார்கள். எனவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.