Home » இந்தியா செய்திகள் » சாலைகள் அமைப்பதை ஆய்வு செய்ய தணிக்கை முறை அறிமுகம்மக்களவையில் மத்திய மந்திரி நிதின் கட்காரி அறிவிப்பு
Introduction-of-Audit-Methodology-for-Inspection-of-Roads

சாலைகள் அமைப்பதை ஆய்வு செய்ய தணிக்கை முறை அறிமுகம்மக்களவையில் மத்திய மந்திரி நிதின் கட்காரி அறிவிப்பு

சாலைகள் அமைப்பதை ஆய்வு செய்ய தணிக்கை முறையை அறிமுகம் செய்ய உள்ளதாக மக்களவையில் மத்திய மந்திரி நிதின் கட்காரி அறிவித்தார்.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அப்போது அவர் தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதையும், பழுது பார்ப்பதையும், 6 வழித்தடங்களாக சாலைகளை அகலப்படுத்துவதையும் ஆய்வு செய்வதற்கு நிதி தணிக்கை முறை போன்று சாலை தணிக்கை முறையை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

சாலை விபத்துகள் மற்றும் பொறியியல் பணிகளை கையாள்கிற விதத்தில், இந்த சாலை தணிக்கை முறையை கொண்டு வர இருப்பதாகவும் அவர் கூறினார்.சாலைகள் அமைப்பதில் தடைகள்

“சாலைகள் அமைக்கும் பல திட்டங்கள், நிலம் எடுத்தல் போன்ற தடைகளை சந்திக்கின்றன. பீகார் போன்ற மாநிலங்களில் சாலைகள் அமைக்க நிலம் எடுப்பதே பெரும் தடையாக உள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

சில நேரங்களில் ராணுவ அமைச்சக அதிகாரிகள் மற்றும் படைகளின் எதிர்ப்புகள் காரணமாக சாலை திட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அப்போது பாரதீய ஜனதா ஆட்சியில் பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையே பயனுள்ள வகையில் ஒருங்கிணைப்பு இல்லை என்று மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம்சாட்டினார்.

இது குறித்து நிதின் கட்காரி கருத்து தெரிவிக்கையில், “ இது தவறான கருத்து. எனது கோரிக்கையை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டி இருப்பதோடு, பிரச்சினைகளை தீர்க்க தலையிட்டுள்ளார்” என்று குறிப்பிட்டார்.

நிதின் கட்காரியிடம் ராஜீவ் ரஞ்சன் (ஐக்கிய ஜனதாதளம்), ராஜீவ் பிரதாப் ரூடி, ரமாதேவி (பாரதீய ஜனதா), கோத்தா பிரபாகர் ரெட்டி (தெலுங்கானா ராஷ்டிர சமிதி), கே.சுரேஷ் (காங்கிரஸ்) ஆகியோர் துணை கேள்விகளை எழுப்பினர்.

அவர்களின் துணை கேள்விகளுக்கு பதில் அளிக்கையில், “ வங்கிகளிடம் இருந்து கூடுதலான கடன்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாசை வெள்ளிக்கிழமை (இன்று) சந்திக்க உள்ளேன். பாரத ஸ்டேட் வங்கி நல்லதொரு ஒத்துழைப்பை அளித்து வருகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளது. ரூ.50 ஆயிரம் கோடி கடன் தரவும் சம்மதித்துள்ளது” என நிதின் கட்காரி குறிப்பிட்டார்.

சாலை விபத்துக்கள் குறித்து நிதின் கட்காரி கூறும்போது, “ சாலை விபத்துக்களை 50 சதவீத அளவுக்கு குறைப்பது என்பது இன்னும் எனக்கு சவாலாகத்தான் உள்ளது” என குறிப்பிட்டார்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் சாலை விபத்துக்கள் 29 சதவீத அளவுக்கு குறைந்துள்ளதாக கூறி, இதில் தமிழக அரசின் பணிகளுக்கு நிதின் கட்காரி பாராட்டு தெரிவித்தார்.